Wednesday, 31 July 2019

ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?

ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?
-----------------------------------------------------------------------------
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்; ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.என்று சொல்லுவான்.

கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது அகரணே ப்ரத்யவாய ஜனகத்தைச் சேர்ந்தது.

அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டுஎன்று சொல்லியிருக்கிறது.

வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றனஎன்கிறது.

கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம்.

-- மஹா பெரியவா வாக்கு

Monday, 29 July 2019

பரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை

பரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை:

சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக்கூடியது. ஆரோக்யத்தையும் நற் சிந்தனையும் தர வல்லது.

இப்போதெல்லாம் இந்த பரிஷேசனமானதுஒரு இயந்திரத்தனமாகத்தான் பலரால் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் அனேகமாக தரப்படுவதில்லை என்பதுதான் வாஸ்தவம். யதார்த்தம்.

பலர் பரிஷேசனம் செய்வதே இல்லை அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை (அல்லது தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது, தொடர்ந்து இரண்டு மூன்று தடவை பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது; அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் பரிஷேசனம் முடிந்துவிட்டது.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? முன்பெல்லாம் பரிமாறுவதற்காக அன்னம் கொண்டு வருவதை பார்த்ததுமே நம் பெரியோர்கள் இந்த அன்னம் நமது சரீரத்திற்குள் சென்று நமக்கு நற் சிந்தனையையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்கவேண்டும்என பய பக்தியுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்ளுவார்கள்.  ஒரு சிலர் சுத்த அன்னத்தை பார்த்ததும் அன்னத்தை இலையில் வைக்கும் முன் நமஸ்தே அன்ன, என்று கைகூப்பி வணங்கி அஸ்மாகம் நித்யமஸ்து ஏதத்என்றும் சொல்லுவர்.

பிறகு பரிஷேசனம் செய்வார்கள்.

இந்த பரிஷேசனத்தை நாம் ஒழுங்காக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வோம்; நமது குழந்தைகளையும் பழக்குவோம்

பரிஷேசனம் எப்படி செய்வது?  ஒரிரு வார்த்தைகளில் விவரிப்பதற்கு முயற்சி செய்கிறேன் இங்கே:

பொதுவாக எல்லா மந்திரங்களும் பரிஷேசன சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும். உறக்க சொல்லுவது பழக்கத்தில் இல்லை.

சாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். அன்னம் வைத்து நெய் விட்டதும் ப்ரணவம் வியாஹ்ருத்தியால் சாப்பாட்டை ஸ்வாகதம் செய்து காயத்ரி மந்திரத்தால் சுத்தப்படுத்தி ஸத்யம் த்வா ருதேன ( ராத்திரியில் ருதம் த்வா ஸத்யேன’)  என இலையை (அல்லது தட்டை) பரிஷேசனம் செய்ய வேண்டும்.

ஆபோசனம்:

பிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி அம்ருதோபஸ்தரண மஸிஎன்று மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜலம் விட்டு பருக வேண்டும். இந்த செயலை ஆபோசனம்என்று சொல்லுவார்கள்.

ப்ராணாஹுதி:

தொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல், பவித்ர விரல்) கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹாமுதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். இதை ப்ராணாஹுதி என்று சொல்லுவார்கள். ப்ராணஹுதிக்கான அன்னத்தை பற்களால் மென்று சாப்பிடக்கூடாது. அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும்.

நமது உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள் ஆகும்.  உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்ல. ஜீர்ணம் ஆன உணவின் சத்தை உடலில் சேர்ப்பதும், அதன் மூலம் நம் உடல் வலிமை பெறுவதற்கும், தேவையில்லாத கழிவுப்பொருளை அகற்றுப்படுவதும், இரத்த ஓட்டம் சீராக ஆவதன் மூலம் சரீரத்தில் வளர்ச்சிக்கும், சம நிலைக்கும் பகவான் உதவுகிறான் என பெரியோர்களின் அபிப்ராயம்.

பிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து ப்ரம்மனிம ஆத்மா அம்ருதத்வாயஎன்று பகவானை தியானம் செய்ய வேண்டும். அப்படி வலிவான இந்த ஜீவனைஅழியாநிலை பெருவதற்காக பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே ப்ரும்மணிம ஆத்மாஎன்ற மந்திரத்தின் அர்த்தம்.

உத்தராபோசனம்:

சாப்பிட்டு முடிந்ததும்  உத்தராபோசனம் செய்ய வேண்டும்.  அதாவது வலது உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு அம்ருதாபிதான மஸி  என்று பருகி மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.

இதுதான் பரிஷேசனம் செய்ய பொதுவான விதி.

இந்த பதிவு ஒரு வழிகாட்டிதான். இதை பார்த்துமாத்திரம் ஒருவர் பரிஷேசனம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். தெரியாதவர்கள் வாத்யார் உதவியுடன் நன்கு கற்றுக்கொள்ளுவோம்.

தொடர்ந்து பரிஷேசனம் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

மேலும் இரண்டு அம்சங்கள் (options):

பரிஷேசன சமயத்தில் மேலும் விசேஷமான இரண்டு அம்சங்கள் உண்டு.  விருப்பமுள்ளவர்கள் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவைகள் நிர்பந்தம் கிடையாது. ( குறிப்பு:  இல்லங்களில் சாப்பிடும்போதும், சுத்தமான இடங்களில் சாப்பிடும்போதும் மட்டும் இவைகளை அனுஷ்டிக்கலாம்.  பொது இடங்களிலோ அல்லது ஆச்சார குறைவான இடங்களிலோ சாப்பிடும்போது இந்த அம்சங்கள் தேவையில்லை..)

1. ஆபோசனத்திகு முன்பு செய்ய வேண்டியது:

உண்கலனின் வலது புறத்தில் பரிஷேசன ஜலத்திற்கு வெளியே யமாய நம: சித்ரகுப்தாய நம: ஸர்வபூதேப்யோ நம:” (அல்லது அன்னபதயே நம: புவநபதயே நம: பூதாநாம்பதயே நம:”) என்று கூறி மூன்று சிறிய அன்னப்பிடியை வைத்து அதன்மேல் யத்ரக்வசன ஸம்ஸ்த்தானாம் க்ஷுத் த்ருஷ்ணோ பஹதாத்மநாம், பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்என்று கூறியப்படியே சிறிது ஜலம் விடுவர்.

இதன் பொருள் என்னவென்றால்  எங்கோ இருந்துகொண்டு பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கும் உயிரினம் அனைத்தின் திருப்திக்கு இந்த ஜலம் உதவட்டும்என்பதே.

2. உத்தராபோசனத்திற்கு பின் செய்ய வேண்டியது:

சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்யும் நீறை வலது கையில் வாங்கி பருகுவோம் அல்லவா, அந்த ஜலத்தில் மீதி சிறிது ஜலத்தை வலது கையின் கட்டை விரலின் வழியாக உண்கலத்தின் வெளியே தரையில் விட வேண்டும். அது சமயம் மனதில் ப்ரார்த்தனை செய்ய வேண்டிய மந்திரம்: ரவுரவேபுண்யநிலையே, பத்மார்புத நிவாஸினாம், அர்சினாம் உதகம் தத்தம், அக்ஷயமுபதிஷ்டது”. நரகம் போன்ற இடங்களில் வசிக்கும் பித்ருக்கள் இந்த செயல் மூலம், இந்த தீர்த்தத்தினால், திருப்தியடைகின்றார்கள்