எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள் (04 டிசம்பர் 2021)
வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்பட்டு கைதாகி ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர், கைதாகும் போது இவருக்கு வயது 21 தான்.
இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.
பாரதியின் உற்ற நண்பர்,மகாத்மா காந்தி இவரை சந்தித்து பேசுவதற்ககாக மலையடிவாரத்தில் காத்திருந்தார்.அகில இந்திய தலைவர்கள் பலரது அன்பையும் நட்பையும் பெற்றவர் ஆனாலும் யாரிடமும் எதற்கும் போய் நிற்காதவர் உடுத்திய உடையுடன் கையில் பைசா காசு இல்லாமல் கிடைக்கும் உணவை சாப்பிட்டபடி ஒரு தேசாந்திரியாக வாழ்ந்தவர் தனது இளைமைக்காலத்தை நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கழித்தவர் இவர் பத்து நிமிடம் யாரிடம் பேசினாலும் அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராளியாகிவிடுவர் எனப் பயந்த பிரிட்டிஷாரால் பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடியவர்.
நாடுதான் பெரிது நான் அல்ல என்று சொல்லி தனக்கான எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லாதவர் அவரைப் போன்றவர்களின் வரலாறு இன்றைய இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். 2 தம்பிகள் 5 தங்கைகள் என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது குடும்ப சொத்து என்பது வறுமைதான்.
உள்ளூர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்றார் சென்னையில் விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் பேச்சைக் கேட்டபிறகு புரட்சிகர இளைஞர்களாக மாறியவர்களில் இவரும் ஒருவர்.
1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு அவர் மூலமாக வ.உ.சியின் அறிமுகம், வங்காளத்து புரட்சி வீரரான சந்திரகாந்த் சக்ரபர்த்தியுடனான நட்பு என்று எல்லாம் சேர்ந்து அவரை கனன்று எரியும் புரட்சியாளராக மாற்றியது.
குடுமியை நீக்கி கிராப் வைத்துக் கொண்டார்.1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்தனர்.அந்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர்.ஆனால் நீலகண்டனுக்கு தனிநபரை கொல்வதில் எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை ஒரு இயக்கமாக இயங்கி வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
இருந்தும் வாஞ்சிநாதன் சம்பவத்தில் முதல் குற்றவாளியகாக நீலகண்டன் கைது செய்யப்பட்டார்.சிறையில் பல வகையில் கொடுமைப்படுத்தப்பட்டார் அவர் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர் சிறையில் அவர் நேர்மையாக இருந்த காரணத்தால் நாலண்டு காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்திருக்கப்பட வேண்டும் அனால் விடுதலை செய்யும் நேரதில் சிறையில் இருந்து தப்பமுயன்றார் என்று குற்றம் சுமத்தி மேலும் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் பூட்டி அவரை பிரிட்டிஷ் அரசு வாட்டியது.
தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாருடனும் வறுமையுடனும் தொடர்பில் இருந்தார் பல நாள் பச்சைத்தண்ணீர்தான் உணவு.ஆனாலும் விடுதலை உணர்வு மட்டும் மங்கிவிடவில்லை.
தேசபக்தர் சிங்காரவேலரின் புரட்சிப் பிரசுரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.அவர் எங்கு இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரங்கூன் முதல் பர்மா வரை பல சிறைகளில் அவர் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்.
சிறை அவரது உடலையும் உள்ளத்தையும் உருக்கிவிட்டதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார்.புகழ்,பெருமை,கீரிடம்,குடும்பம் என்று எதுவுமற்ற இந்த துறவு வாழ்க்கை அவருக்கு பிடித்துப் போனது ஒரு கட்டத்தில் ஊர் சுற்றியது போதும் என முடிவு செய்து மைசூரு நந்தி மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்தார்.
அவரது தேஜஸான முகத்தை பார்த்து அவரைப் பார்க்க மக்கள் கூடினர் உங்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை தண்ணீர்தான் இருக்கிறது என்று குகையருகே ஓடிய சுனை நீரைக் கொடுத்தார் அவர் தந்த அந்த சுனை நீரால் தங்கள் வியாதிகள் குணமானதாக மக்கள் செய்தி பரப்ப கூட்டம் திரண்டது கூடிய மக்கள் அவரது பக்தர்களாயினர் அவர் எப்போதும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்ததினால் சுவாமி ஒம்காராணந்தா என்று அழைக்கப்பட்டார்.
இது அவருக்கு பிடிக்கவில்லை எதுவுமே வேண்டாம் என்றுதானே இந்த மலையடிவாரத்திற்கு வந்தோம் இங்கே இது என்ன புது பதவி புகழ் என்று வெறுத்தவர் மக்கள் எளிதில் வரஇயலாதபடி அந்த மலையின் உச்சிக்கு சென்றுவிட்டார் அந்தப் பகுதியில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு யாருடைய தொடர்பும் இன்றி தியான வாழ்வை மேற்கொண்டார்.சதா காலமும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடி இருந்ததினால் இவர் ஒம்காரனாந்தா என்று அழைக்கப்பட்டார்.
இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அரண்மனையில் இருக்க கேட்டுக் கொண்டார் இந்தப் பரதேசிக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிவிட்டு திரும்ப மலை மீது ஏறிக்கொண்டார்.
இப்படி நாற்பத்தி நான்கு ஆண்டுகள் புரட்சி வாழ்க்கையையும் ,நாற்பத்தி நான்கு ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்த வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி அரசியல்,பொதுவாழ்வு ஆன்மீகம் பற்றி மூன்று நுால்களை எழுதியுள்ளார்.அவரைப் பற்றிய புத்தகங்களும் குறிப்புகளுமே சொற்பமாக இருக்கும் இந்நாளில் அவர் எழுதிய புத்தகங்களை தேடிப்பிடிப்பது சிரமமே.
துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், 1978 மார்ச் மாதம் 4ம் தேதி இறந்தார்.மறுநாள் ஆயிரக்கணக்கானவர்கள் அழுதபடி கூடியிருக்க அவரது பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிரான சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரர் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விதைத்த விதையும் சுதந்திரம் பெற ஒரு காரணம் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர்
நன்றி திரு எல்.முருகராஜ், தினமலர் - 04 டிசம்பர் 2021