''ஹிந்து மதத்தில் சுய ஒழுக்கம் மிக முக்கியம். நாம் சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்,'' என, காஞ்சி விஜயேந்திரர் வலியுறுத்தினார்.
அவர் கூறியுள்ளதாவது:மனிதர்கள் அமைதி, ஒற்றுமையுடன் வாழ கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பக்தி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. பக்தர்களின் கூட்டு முயற்சியால் கோபுரங்கள் கட்டி எழுப்பபட்டுள்ளன.
இவை ஒற்றுமையின் சின்னமாக திகழ்கின்றன.தர்ம காரியங்களை உணர கோவில்கள் உதவுகின்றன. தர்மம், பக்தி, வழிபாடு, இயற்கைக்கு உதவுதல், இரக்கம், அன்பு, கருணை, நல்ல வார்த்தைகள் பேசுதல் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பெற்றோரே, நமக்கு முதல் குரு. அவர்களை மதிப்பதன் மூலம், தர்ம சிந்தனைகள் வளரும். தாய், தந்தையிடம் கடவுளின் கருணையை உணரலாம். உடல்ரீதியாக நம்மை வளர்க்கும் இவர்கள், மூத்தோரை மதித்தல், விருந்தோம்பல் போன்ற தர்ம காரியங்களையும் சொல்லித் தந்து முழு மனிதர்களாக உருவாக்குகின்றனர்.ஹிந்து மதத்தில் சுய ஒழுக்கம் முக்கியம். இது ஆத்ம சக்தியை வளர்க்க உதவும். சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் சுய ஒழுக்கத்துடன் இருக்க முனிவர்களும், சித்தர்களும் அறிவுறுத்திஉள்ளனர்.
கடவுளின் உருவத்தை நம் இதயத்தில் வைத்து பாதுகாக்க பக்தி உதவுகிறது. நகரங்களில் வாழ்ந்தாலும், பழைய கலாசாரத்தை மறந்து விடாமல் அவற்றை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் கடவுளின் பெயரை அன்றாடம் உச்சரிப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
நம் வீட்டிற்கு அருகில் வளரும் சிறிய மலர்களை, கடவுளின் பாதங்களுக்கு காணிக்கையாக்கலாம்.கோவில்களில் உபன்யாசம், சிவபுராணம், விநாயகர் பாடல், அபிராமி அந்தாதி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். பாரம்பரிய உடை, நெற்றியில் திலகத்துடன் கோவிலுக்கு வர வேண்டும். கோவில்களில் பக்தி மணம் வீச வேண்டும். ஹிந்து தர்மங்களை முழு விசுவாசத்துடன் பின்பற்றி கடவுளின் ஆசி பெறவேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.