Friday 24 April 2020

பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."



"பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."

சிரமத்திற்கு உதவி கேட்கப்போன, ஸ்ரௌதிகளின் பிள்ளையிடம், 'நீ ஊருக்குப் போ' என்று பெரியவா சொன்னதை, 'கையை விரிச்சுட்டா" என்று தப்பாக எண்ணியவருக்கு அனுக்ரஹ சம்பவம்.

(இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?)



சொன்னவர்-தஞ்சாவூர் ஸந்தான ராமன்.
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புரியாத விளையாட்டுகள் விளையாடுவதில் பெரியவாளுக்கு ஈடு இணையே கிடையாது.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமம். அங்கே வாழ்ந்தவர் சாம்பசிவ ஸ்ரௌதிகள்; பூர்ணமாக அத்யயனம் செய்தவர். அந்திய காலத்தில் அவர் ஆசிரமம் வாங்கிக் கொண்டார். அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் பூர்ணமாக அத்யயனம் பண்ணினவர். அவருக்கு இதயம் மிகவும் பலஹீனம். சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடம் வேத பாராயணம் சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கும் பயமா இருக்கும்.  இதனால் அவரை இதர வைதிகர்கள் காரியங்களுக்குக் கூப்பிடுவதில்லை. தாயாரும் அவரும் கஷ்ட ஜீவனம்.

கணீரென்ற குரலில் வேதம் சொல்லும் போது ஆனந்தமாக இருக்கும். என்ன செய்வது? திடீரென்று பிராணன் போய் விட்டால் என்ன செய்வது? என்று "போதும்" என்று சொல்லி விடுவேன்.முடிந்தவரை ஸகாயம் செய்து வந்தேன். இப்படி ஒரு பழக்கம்---ஸந்தானராமன்(கட்டுரையாளர்)

ஒருநாள் காலை, அவருடைய வயதான தாயாருடன் என்னிடம் வந்தார்." நான் காஞ்சிபுரத்திற்குப் போகிறேன். பெரியவாளைத் தரிசனம் செய்து, 'இப்படி வேத அத்யயனம் செய்து, சன்னியாசியான ஒருவருடைய பிள்ளை, சாப்பாட்டுக்கு இல்லாமல் தவிக்கிறானே? எனக்கு வழி செய்யக் கூடாதா?" என்று கேட்கப் போகிறேன். அம்மாவும் கூட வருகிறார்" என்றார்.

நான்(ஸந்தானராமன்), " ஏன் பெரியவாளைத் தொந்தரவு செய்கிறாய்? நானே ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். " இல்லை, நான் பெரியவாளைப் பார்க்க வேண்டும்.எனக்கு டிக்கெட் செலவுக்குப் பணம் கொடுத்தால் தேவலை" என்றார். பஸ் டிக்கெட் வாங்கிக் கொடுத்து,செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். இதர வேறு ஜோலிகளில் இதை நான் மறந்து விட்டேன்.

பத்து நாட்களுக்குப் பின் ஒருநாள் காலையில் தாயாருடன், என் வியாபார ஸ்தலத்தில் எனக்காகக் காத்திருந்தார். "காஞ்சிபுரம் போய்விட்டு வந்தாச்சா? பெரியவா என்ன சொன்னா?" என்று கேட்டேன்.

"என்ன சொன்னா !. 'நான் ஸந்நியாசியாத்துப் புள்ளை, வேத அத்யயனம் பூர்ணமாகப் பண்ணினவன். எந்த இடத்தில்  வேண்டுமானாலும் கேளுங்கள்; நான் சொல்வேன் என்றேன். என் சிரமத்திற்கு ஏதாவது உதவி பண்ண வேண்டும்" என்றேன். "இங்கேயே தாயாருடன் இரு சொல்கிறேன்" என்றார்கள் பெரியவா. பிறகு தினம் காலை, மாலை தரிசனம் செய்து இதையே சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று நேற்று சாயந்திரம், "நீ ஊருக்குப் போ" என்றார் பெரியவா. ஒரு பையனிடம் டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்லி என்னையும், அம்மாவையும் திரும்பிப் போகச் சொல்லிவிட்டார். பெரியவாளும் கையை விரிச்சுட்டா."

இதை சொல்லும் போது கண் கலங்கியது. எனக்கும் சங்கடமாயிருந்தது.பின் அவர்களை கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.

மணி பதினொன்று இருக்கும். காஞ்சிபுரத்திலிருந்து வரும்போது, கையில் கொண்டுவந்த அதே துணிப்பையுடன் இவர் மட்டும் (ஸ்ரௌதி பிள்ளை)  தனியே, என் வியாபார ஸ்தலத்தில் பிரசன்னமானார். முகத்தில் தெளிவு,ஒரே அழுகை,விக்கல், பேச முடியாமல் தவித்தார்.

சற்று நிதானித்து, 'என்ன? சொல்' என்றேன்.'பெரியவாளைப் பற்றித் தப்பா பேசிட்டேன்'னு சொல்லி நடுக்கடையில் திடீரென்று நமஸ்காரம் செய்தார்.

"என்ன?" என்று மறுபடி கேட்டேன். ஆச்சரியமான விவரங்கள் கிடைத்தன.

காலை ஒன்பது மணிக்கு என்னைப் பார்த்து விட்டு, தாயாருடன் பஸ்ஸில் ஊருக்குப் போயிருக்கிறார். தெரு முனையில் இவரைக் கண்டவுடன், தெருக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, "உங்காத்து திண்ணையிலே நேற்று காலை யாரோ, ஒரு வண்டி நெல் கொண்டு வந்து, இறக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். நீ வரும்வரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுச் சாவியை அம்மாவிடம் கொடுத்து விட்டு, அடுத்த பஸ்ஸைப் பிடித்து என்னைப் பார்க்க வந்துள்ளார்.

ஒரேஅழுகை,விம்மல். "பெரியவாள், தெய்வம் தெரியாமல் சொல்லி விட்டேன்."

பிறகு சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பினேன். பின்னால், நான் காஞ்சிபுரம் போனபோது விவரம் தெரிந்தது. இவர் சென்ற அன்றைக்கே, பெரியவா இவரிடம் கருணையும், அனுக்ரஹமும் பண்ண நிச்சயத்திருந்தார்கள்.

கும்பகோணம் பிரபல மிராசுதார் ஒருவர் தரிசனம் பண்ண வந்திருக்கிறார். அவரிடம் விவசாயம், அந்த வருஷக் கணக்கு பற்றி அவர்களுக்கே உரிய இனிய பாணியில் விசாரித்திருக்கிறார்கள் பெரியவா. அவரிடம், 'எனக்கு ஒரு வண்டி நெல் தருவாயா?' என்று கேட்டிருக்கிறார்கள், அவரும் 'தருகிறேன்' என்றார்.

"நீ இப்பொழுது காமாக்ஷியைத் தரிசனம் பண்ணிவிட்டு மறுபடி இங்கே வா" என்று உத்தரவு செய்துள்ளார்கள்.  அவர்போனவுடன் நமது கதாநாயகரிடம் ஊர்-அட்ரஸ்-தெருவில் எத்தனாவது வீடு-வாசலில் திண்ணை இருக்கிறதா?- என்றெல்லாம் பெரியவா விசாரித்திருக்கிறார்கள்.

மிராசுதார் திரும்பி வந்தவுடன், கிராமம்,வீடு,தெரு அடையாளம் சொல்லி, " அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு வண்டி நெல் இறக்கிவிடு. இன்றே கும்பகோணம் போ, நாளை மாலைக்குள் நெல் போய் சேர்ந்து விடுமா?" என்று கேட்டிருக்கிறார்கள் பெரியவா. மிராசுதார்,"கண்டிப்பாய் சேர்த்து விடுவேன்" என்று கூறியுள்ளார். மிராசுதாரும் கும்பகோணம் சென்று, மறுநாள் காலை ஒரு வண்டி நெல்லை இவர் வீட்டுத் திண்ணையில் இறக்கி விட்டு, தெருவாரிடம் சொல்லி விட்டு  வந்திருக்கிறார்.

இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?

பெரியவாளுடைய கருணையே கருணை!