Monday 10 February 2020

"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால், எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை; கவர்ன்மெண்ட் சம்பளமும் கிடையாது-பெரியவா"


"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால், எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை; கவர்ன்மெண்ட் சம்பளமும் கிடையாது-பெரியவா"
(கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு புண் படுத்தாத,நோக
வைக்காத ஓர் அறிவுரை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-162
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பத்து,பன்னிரண்டு கம்யூனிஸ்டுகள் வந்தார்கள்.
பெரியவாள், தரிசனம் கொடுக்க இசைவார்களோ,
மாட்டார்களோ என்ற தயக்கம் இருந்தது.

பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும்,'வரச் சொல்'
என்று ஜாடை காட்டி விட்டார்கள்.

மெல்லப் பேச்சு தொடங்கியது.வந்திருந்தவர்களில்
ஒருவர், "நான் கம்யூனிஸ்ட் பார்ட்டி சார்பில்
அசெம்பிளிக்குப் போட்டியிடுகிறேன்.எனக்கு வெற்றி
கிடைக்கணும்." என்று கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்துப் பெரியவாள் சொன்னார்கள்;
"நீங்கள் மக்களுக்கும் தேசத்துக்கும் சேவை செய்யப்
பிறந்தவர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் ஜெயித்தால் எனக்குச் சந்தோஷம்.விளையாட்டு, சண்டை, தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியடைந்தால் வருத்தப்படக் கூடாது. ஜெயம் ஏற்பட்டால் தன்னுடைய கட்சி.தன்னுடைய தலைவர் , தன்னுடைய குடும்பம்- இவற்றின் சௌகரியத்துக்காக பதவியைப் பயன்படுத் தக்
கூடாது.

"உங்கள் கொள்கை,'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' (தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட 'மகேசன் தொண்டு' என்று பிரசாரம் செய்கிறீர்கள்)
"மக்கள் தேவையறிந்து தொண்டு செய்யணும்.
உங்களைச் சுற்றியுள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள்.. எல்லாருக்கும் சேவை செய்யணும் .சேவையில் ஜாதி -மதப்பிரிவே இல்லை. சங்கராச்சாரியராகச் சொல்லப்படும் நான்உங்கள் கொள்கைகளில் தலையிட மாட்டேன்.உங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ..அதைச் செய்யுங்கள்.

"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால்,எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை;கவர்ன்மெண்ட் சம்பளமும்
கிடையாது.ஓர் ஓரத்திலே உட்கார்ந்து கொண்டு தேடி வருபவர்களுக்கு ஓரிரண்டு வார்த்தை ஆறுதல் சொல்கிறேன். அவ்வளவுதான்."

கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு ஒரே திகைப்பாய் போய் விட்டது. முதலில் தரிசனம் கொடுப்பதற்கே இசைவார்களா? என்று சந்தேகத்துடன் வந்தவர்களுக்கு,இவ்வளவு பெரிய
உபந்யாஸம் செய்து விட்டார்கள் பெரியவாள்.

யாரையும் புண் படுத்தாத,நோக வைக்காத சொற்கள்!
பின்னர் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு ஊர்,பெயர்
விசாரித்து, பெரிய மாதுளம்பழம் கொடுத்தார்கள்.
(விபூதி-குங்குமம் கொடுத்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்)

அவர்கள் சென்றபின். 'எல்லாரும் நாஸ்திகர்கள்' என்றார் ஒரு தொண்டர். அவர்களிடம் இத்தனை நேரம் பேசி உடலை வருத்திக் கொள்ள வேண்டுமா? என்ற ஆதங்கம்.
"ஈசுவரன் அவாள்கிட்டேயும் இருக்கான்,
ஸர்வே பவந்து ஸுகிந"(எல்லாரும் நன்றாக இருக்க வேணும்)

தொண்டர்களுக்கு, இந்த தத்துவம் எட்டாக்கனி.

சுமங்கலி பூஜையின் மும்கியத்துவம்


சுமங்கலி பூஜையின் மும்கியத்துவம் 

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.
தம்பதிகள் இருவரும், ”ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.
பெரியவர் அடுத்த கேள்வியாக, ”மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.
”வருவா” என்றனர் அவர்கள்.
”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.
“முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார்.
பெரியவரிடம், ”சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.
சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,” என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.
“உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.

நாம் சாதாரண ஜீவன்கள் ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும்

காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன்.

ஒருநாள்  பகலில் எங்கோ பட்டை தீர்க்கும்  வெயிலில்  மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு  தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்.  சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க்  கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்ததைப்  பார்த்ததும்  நெஞ்சு வறட்சியும்  தாகமும்  அவளை நோக்கி செல்ல வைத்தது.   

''அம்மா  கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா  தருகிறேன்.. நீ  யாரப்பா?''
 இவள்   பார்த்தால்  நிரக்ஷர குட்சிபோல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி  எதற்கு சொல்லவேண்டும்.  அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன்  ''அம்மா  நான் ஒரு  யாத்ரீகன்' என்றான்.

'அதென்னப்பா  அப்படி சொல்கிறாய்?  இந்த உலகத்திலேயே   ரெண்டே ரெண்டு  பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன்.  இவர்கள் தானே  காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை  ஒருவன்,  இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை  இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில்   ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா,  அப்படியென்றால் நான் ஒரு  விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம்  புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் .   இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான்  அதிதி. டெம்பரரி  விருந்தாளிகள் .  வந்து போய்விடுபவர்கள்.   இளமையும்  செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை''  என்றாள்  அந்த பெண்.

காளிதாசன் திகைத்தான்.  ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.  ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா?  இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்   ''அம்மா  அப்படி யென்றால்  நான்  ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.

அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக  இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது.  மற்றொன்று  விருக்ஷம், மரம்.  வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே   நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா?  சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள்  அந்த பெண்.

காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான்   ''அம்மா  நான் இந்த உலகிலேயே  ரொம்ப பிடிவாதக்காரன்  சளைக்காதவன் '  புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.

குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண்.  உனக்கு உலகிலேயே பிடிவாதமாக  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செயல்படுவது ரெண்டு  தான் என்று தெரியாதா ?  ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி.   வெட்ட வெட்ட  துளிர்த்து வளர்பவை.ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ  அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?''  என்றாள்  அவள்.

கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு.   உரக்க  அவளிடம் சொன்னான்  ''சரி சரி  நீ என்னை உலகிலேயே சிறந்த  ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக  பதில் வைத்திருந்தாள் .

''அப்பனே  உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன்.  இன்னொருவன்  அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி  போட்டுக்கொண்டு  அவனையே புகழ்ந்து கொண்டு  அவன் பின் செல்பவன்.  உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே''  என்றாள் .

''அம்மா  என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று  என்னை கேட்டாய்  எனக்கு பதில் தெரியவில்லை,  இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' அவள் காலில் விழுந்தான் காளிதாசன்.  எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த  காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள்.   இரு  கை கோர்த்து கும்பிட அவனை பார்த்து
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு  சாதாரண மனுஷ்யஜீவன்   என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள்.    அப்போது உருவானதே   காளிதாசனின் சியாமளா தண்டகம். இதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

நாம்  சாதாரண ஜீவன்கள்  ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு  அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும். சதா இந்த சிந்தனை இருந்தால் அதுவே  பகவான் மேல் பக்தியை வளர்க்கும். அறிவை வளர்க்கும்.

"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."-ஒரு அம்மாள்.


"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."-ஒரு அம்மாள்.
("புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா".-பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-129
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பெரியவாளின் சரித்ரம்" - Part 473. 13 Jan 20
வெளியூர் அம்மாள் அடிக்கடி தரிசனத்துக்காக ஸ்ரீ மடத்துக்கு வருபவர். அதனால்,பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் தொண்டர்களுக்கு நன்றாக அறிமுகமானவர். அவர் ஒரு தடவை தரிசனத்துக்காக வந்தபோது வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்பவர் பெரியவாளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார். வந்த அம்மையார் அவரிடம் குசலம் விசாரித்துவிட்டு, பெரியவாளிடம் ஒரு கேள்வி கேட்கப் போவதாகத் தெரிவித்தார்.
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."
வித்யார்த்திக்குக் கோபம் வந்தது.
"பெரியவாளிடம், ஆன்ம விஷயங்கள்,ஈசுவர பக்தி, பூஜை - புனஸ்காரம் பற்றிப் பேசலாம். உங்கள் வீட்டுப் புளியமரங்கள் காய்க்கவில்லை என்றால், அவர் என்ன செய்வார்? இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது" என்று கடிந்து கொண்டார்.
பெரியவாள் பக்கத்தில் இன்னொரு சிஷ்யர் இருந்தார்
"அந்த அம்மா என்ன சொல்றா? கேளு என்றார் பெரியவாள்.
அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்.
"அவா தோப்பிலே புளிய மரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கலையாம்"
பெரியவாள் சொன்னார்கள்.
"புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா".
"கேள்விப்பட்டிருக்கேன். தோப்புப் புளிய மரங்களிலே பிசாசு இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்வார்கள்."
"அந்த அம்மையார் குடும்பத்தில்,முன்னொரு தலைமுறையில், ஒரு பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த விவ்ரம் இந்த அம்மாளுக்குத் தெரியுமான்னு கேளு.."-பெரியவா
"கேள்விப்பட்டிருக்கேன். என் மாமனார் அப்பா, தன் மூத்த சம்சாரத்தை ரொம்பவும் கொடுமைப் படுத்தினாராம். இம்சை பொறுக்காமல் அவர் கிணற்றில் குதித்து உயிரை விட்டாராம்."-அம்மாள்.
இந்த மாதிரி ரகசியமான குடும்ப சமாசாரங்களேல்லாம் பெரியவாளுக்கு எப்படித் தெரிகிறது என்று கூட வந்தவர்கள் ஆச்சர்யமும் அவமானமும் அடைந்தார்கள்
பெரியவாள், அப்போது பிரசித்தமாக இருந்த ஒரு மந்திரவாதியிடம் (ஆனந்த தாண்டவபுரம் அய்யங்கார்) சென்று,பரிகாரம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தில் தில - ஹோமம் பண்ணச் சொன்னார்கள்.
இவ்வளவையும் செய்து முடிந்த பிறகு, புளிய மரங்கள் நன்றாகக் காய்க்கத் தொடங்கின.
முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்களில் ஒரு கூடை நிறைய எடுத்து வந்து பெரியவாள் முன்பு வைத்தார் அம்மையார்.
இனிப்பான புளியம்பழங்கள்!
பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.
"பெரியவாள் அனுக்ரஹத்தால் என்னோட மாமியாரின் மாமியாருக்கு நல்ல கதி கிடைச்சுது" என்று கண்களில் நீர் மல்கக் கூறினார் அம்மையார்.
துர் மரணம் ஏற்பட்டால் அந்த உயிர் ஆவியாக அலைந்து தவிக்கிறது. அதற்கான பரிகாரங்களைச் செய்து விட்டால் , தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது

அரிசி வாங்கலியோ அரிசி!" (அரி சிவா ங்கலியோ) (பெரியவாளின் சிலேடைப் பேச்சு)

"அரிசி வாங்கலியோ அரிசி!"
(அரி சிவா ங்கலியோ)
(பெரியவாளின் சிலேடைப் பேச்சு)
கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி-தினமலர்

அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர்.
ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது . பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள்.

வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர். அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார்.
இந்நிலையில் சுவாமிகளை வணங்கி, ''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' என்றார்.
சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, ''தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!'' என்றார் சிரித்தவாறே
.மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் நின்றவர்களுக்கும் புரியவில்லை.

''என்ன! சொல்றது புரியலையா?'' எனக் கேட்டார் சுவாமிகள்.
''எப்போதும் 'ஹரி' 'சிவ' நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? 'அரிசி வாங்கலியோ... அரிசி' என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். 'அரிசி வாங்கலியோ' என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!''
சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.

கனியாக வந்த குழந்தை! (குழந்தை வரம் கேட்ட தம்பதிக்கு அருளிய சம்பவம்)

 
கனியாக வந்த குழந்தை!
(குழந்தை வரம் கேட்ட தம்பதிக்கு அருளிய சம்பவம்)

(ஆச்சரியம் என்னவெனில் குழந்தை பிறந்தது வைகாசி அனுஷத்தன்று)

சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன

தசரதன் என்ற மாமன்னன் எதற்காக ஏங்கினானோ அந்த ஏக்கம் எங்களுக்கு.

என்ன பாவம் செய்தோம்.

பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது - புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை.

என் மாமனார், புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி.

மகாப்பெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கியிருந்தபோது (1965) சிறிது உடல் நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு,என் மாமனார்தான் பெரியவாளை தொட்டு சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்.

மகாப் பெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது,சில மாதங்கள் எங்கள் மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தசரதனுக்கு வசிஷ்டன் இருந்தார்.

எங்களுக்கு?

'பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்' என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என் கணவரும் சேர்ந்து புறப்படவிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும்.! யாராவது ஒருவர் மட்டும் தரிசித்துவிட்டு வருவோம்.

எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருந்தது போலும்! 1-9-1988 அன்று கலவையில் நாங்கள் இருவருமாக மகாப்பெரியவாளைத் தரிசித்தோம்.

ஒரு மாமாங்க ஏக்கம் தீரப்போகிறது.

நாங்கள் சென்ற சமயம்,பெரியவாள் மேனாவுக்குள், கதவை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

"எப்போது தரிசனம் கொடுப்பார்கள்?"

"சித்தம் போக்கு,சிவம் போக்கு...சாட்சாத் பரமேஸ்வரனாலேயே பதில் சொல்ல முடியாத கேள்வி! இரண்டு மணி நேரம் கழித்துத் கதவைத் திறக்கலாம்; அல்லது இதோ இப்போதே.."

அந்த விநாடி வந்துவிட்டது.

ஓர் அணுக்கத் தொண்டர், "புதுக்கோட்டை டாக்டர் தியாகராஜனின் இரண்டாவது பிள்ளை, தம்பதியா வந்திருக்கா.தரிசனத்துக்கு" சற்று உரத்த குரலில் விண்ணப்பித்துக்கொள்ள......

பெரியவாளே கதவைத் திறந்தார்கள். தெய்வீகப் புன்முறுவல்! அந்த க்ஷணகாலம் அப்படியே நிரந்தரமாகவே நின்றுவிடக் கூடாதா?- என்றொரு வேட்கை.

"சாம்பமூர்த்தியை ரொம்ப நன்னா கவனிச்சிண்டார்,உன் தகப்பனார்...."

மெய் சிலிர்த்தது எங்களுக்கு.

என் கணவர் குமார் என்ற கிருஷ்ணமூர்த்தி, எங்கள் ஏக்கத்தை, நெஞ்சங் குழையக் கூறினார்

"நாங்கள் தனித்தனியா தரிசனத்துக்கு வந்திருக்கோம்.இப்போதான், முதல் தடவையா,ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்..."

பெரியவா கைகளைத் தூக்கி ஆசிர்வதித்தார்கள் மேனாவிலிருந்த ஓர் ஆரஞ்சுப்பழத்தை , என் கணவர் கையில் கொடுத்தார்கள். ஒரு குழந்தையையே எடுத்துக் கொடுப்பதுபோல் எங்களுக்குத் தோன்றியது.

21-5 -1989 அன்று எனக்கு ஒர் ஆண்மகவு பிறந்தது. இதிலென்ன ஆச்சரியம்? ஆச்சார்யாள் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்லிவிடலாம்தான்.

ஆச்சரியம் இருக்கிறது.அன்றைய தினம் வைகாசி அனுஷம் - பெரியவா ஜன்ம நக்ஷத்ரம்.

முன்னர்,ராமேஸ்வரத்தில் சில பரிகாரங்களை செய்து முடித்திருந்தோம். அதனால் குழந்தைக்கு இராமநாத் சந்திரசேகர் என்று பெயர் சூட்டினோம்.