Monday, 10 February 2020

நாம் சாதாரண ஜீவன்கள் ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும்

காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன்.

ஒருநாள்  பகலில் எங்கோ பட்டை தீர்க்கும்  வெயிலில்  மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு  தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்.  சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க்  கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்ததைப்  பார்த்ததும்  நெஞ்சு வறட்சியும்  தாகமும்  அவளை நோக்கி செல்ல வைத்தது.   

''அம்மா  கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா  தருகிறேன்.. நீ  யாரப்பா?''
 இவள்   பார்த்தால்  நிரக்ஷர குட்சிபோல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி  எதற்கு சொல்லவேண்டும்.  அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன்  ''அம்மா  நான் ஒரு  யாத்ரீகன்' என்றான்.

'அதென்னப்பா  அப்படி சொல்கிறாய்?  இந்த உலகத்திலேயே   ரெண்டே ரெண்டு  பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன்.  இவர்கள் தானே  காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை  ஒருவன்,  இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை  இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில்   ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா,  அப்படியென்றால் நான் ஒரு  விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம்  புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் .   இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான்  அதிதி. டெம்பரரி  விருந்தாளிகள் .  வந்து போய்விடுபவர்கள்.   இளமையும்  செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை''  என்றாள்  அந்த பெண்.

காளிதாசன் திகைத்தான்.  ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.  ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா?  இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்   ''அம்மா  அப்படி யென்றால்  நான்  ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.

அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக  இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது.  மற்றொன்று  விருக்ஷம், மரம்.  வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே   நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா?  சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள்  அந்த பெண்.

காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான்   ''அம்மா  நான் இந்த உலகிலேயே  ரொம்ப பிடிவாதக்காரன்  சளைக்காதவன் '  புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.

குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண்.  உனக்கு உலகிலேயே பிடிவாதமாக  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செயல்படுவது ரெண்டு  தான் என்று தெரியாதா ?  ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி.   வெட்ட வெட்ட  துளிர்த்து வளர்பவை.ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ  அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?''  என்றாள்  அவள்.

கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு.   உரக்க  அவளிடம் சொன்னான்  ''சரி சரி  நீ என்னை உலகிலேயே சிறந்த  ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக  பதில் வைத்திருந்தாள் .

''அப்பனே  உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன்.  இன்னொருவன்  அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி  போட்டுக்கொண்டு  அவனையே புகழ்ந்து கொண்டு  அவன் பின் செல்பவன்.  உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே''  என்றாள் .

''அம்மா  என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று  என்னை கேட்டாய்  எனக்கு பதில் தெரியவில்லை,  இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' அவள் காலில் விழுந்தான் காளிதாசன்.  எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த  காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள்.   இரு  கை கோர்த்து கும்பிட அவனை பார்த்து
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு  சாதாரண மனுஷ்யஜீவன்   என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள்.    அப்போது உருவானதே   காளிதாசனின் சியாமளா தண்டகம். இதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

நாம்  சாதாரண ஜீவன்கள்  ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு  அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும். சதா இந்த சிந்தனை இருந்தால் அதுவே  பகவான் மேல் பக்தியை வளர்க்கும். அறிவை வளர்க்கும்.

No comments:

Post a Comment