Wednesday 31 July 2019

ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?

ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?
-----------------------------------------------------------------------------
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்; ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.என்று சொல்லுவான்.

கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது அகரணே ப்ரத்யவாய ஜனகத்தைச் சேர்ந்தது.

அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டுஎன்று சொல்லியிருக்கிறது.

வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றனஎன்கிறது.

கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம்.

-- மஹா பெரியவா வாக்கு