Friday, 7 February 2020

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே"-பெரியவா


நானும் ஒரு பிச்சைக்காரன் தானே"-பெரியவா

"ஆமாம் பெரியவா பிக்ஷைக்காரர்தான்" என்றார் துடுக்கான ஒரு தொண்டர்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத் தேவையான தூய்மையான தண்ணீரை சேமித்து வைப்பதே பெரும் பாடாக இருந்தது.
பெரியவா ஸ்நானம் - அனுஷ்டானம் செய்வதற்காக இரண்டு மைல் தூரம் சென்று நல்ல தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.
ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த கட்டடத்துக்கு வெளிப்புறத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பெரியவா அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்கள்.
குழந்தை குட்டிகளுடன் ஒரு பிச்சைக்காரக் குடும்பம் ஒவ்வொரு வீடாகச் சென்று கெஞ்சிக்கேட்பதும் அவர்கள் மறுப்பதும், இவர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த வீட்டுக்குப் போவதும்...,தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்தது

.
"ஒரு பிடி அரிசி கூட பிச்சைக்காரர்களுக்குப் போட முடியாத தரித்திரர்களாகி விட்டார்களா,அந்தக் கிராமத்தினர்?
"இல்லை.அரிசி என்ன, அரை வெள்ளி கேட்டால் கூடக் கொடுக்கக் கூடியவர்கள் தான் அவர்கள்.
"இவர்கள் தண்ணீர் அல்லவா - குடி தண்ணீர் அல்லவா - கேட்கிறார்கள்.
"அப்படியானால் யார் வீட்டிலும் ஒரு சொம்பு தண்ணீர் கூட இல்லையா?
இருந்தது. தமக்கே கஷ்டம் என்னும் போது சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம் தண்ணீரில் ஒரு சொம்பு அளவு தானம் செய்து விட்டால் சேமிப்பில் குறைந்து விடாதா?
அத்துடன், தண்ணீர் கேட்பது யார்? ஒரு பரதேசப் பிச்சைக்காரக் குடும்பம்! 'இவர்களுக்குத் தண்ணீர் கொடுக்காவிட்டால் ஒரு நஷ்டமும் வந்து விடாது' என்ற மனோபாவம்.
பெரியவாள் அந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை அழைத்து வரச் சொன்னார்கள். தன் அனுஷ்டானத்துக்காக கடத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். இரண்டு கைகளையும் குழித்து வைத்து பரபரவென்று வாயால்உறிஞ்சி அவர்கள் தண்ணீர் குடித்ததை,கருணை ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.
வயிறு நிறையத் தண்ணீர் குடித்து நெஞ்சு நிறைய நன்றியை நிரப்பிக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.
தொண்டர்கள் செவிகளில் விழும்படியாக சற்றே உரத்த குரலில்;, "நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!" என்றார்கள்.
"ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்.