Wednesday, 29 April 2020

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

* பூ உற்பத்தி செய்பவர்
* மாலையாக கட்டுபவர்
* அதனை விற்பனை செய்பவர்
*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை,காய் வகை கொடுக்கும் விவசாயப்பெருமக்கள் மற்றும் வியாபாரிகள்.
* அர்ச்சகர்
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர்,
* தேங்காய் விற்பனைசெய்பவர்.
* ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
* சந்தனம்,குங்குமம், ,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* வாழைமரம் வளர்ப்பவர்கள்
* அவற்றைவிற்பனைசெய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்
* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்

* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்
முகாமையாளர் வரை
* ஓதுவார்கள்,
* நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
* சிற்ப கலைஞர்கள்
* ஓவியர்கள்
* கட்டட கலைஞர்கள்
* ஆசாரிமார்கள்
* விசேட காலங்களில் தொழில்புரியும்    மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது.

என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை உருவாக்கினார்கள்.

Friday, 24 April 2020

பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."



"பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."

சிரமத்திற்கு உதவி கேட்கப்போன, ஸ்ரௌதிகளின் பிள்ளையிடம், 'நீ ஊருக்குப் போ' என்று பெரியவா சொன்னதை, 'கையை விரிச்சுட்டா" என்று தப்பாக எண்ணியவருக்கு அனுக்ரஹ சம்பவம்.

(இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?)



சொன்னவர்-தஞ்சாவூர் ஸந்தான ராமன்.
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புரியாத விளையாட்டுகள் விளையாடுவதில் பெரியவாளுக்கு ஈடு இணையே கிடையாது.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமம். அங்கே வாழ்ந்தவர் சாம்பசிவ ஸ்ரௌதிகள்; பூர்ணமாக அத்யயனம் செய்தவர். அந்திய காலத்தில் அவர் ஆசிரமம் வாங்கிக் கொண்டார். அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் பூர்ணமாக அத்யயனம் பண்ணினவர். அவருக்கு இதயம் மிகவும் பலஹீனம். சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடம் வேத பாராயணம் சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கும் பயமா இருக்கும்.  இதனால் அவரை இதர வைதிகர்கள் காரியங்களுக்குக் கூப்பிடுவதில்லை. தாயாரும் அவரும் கஷ்ட ஜீவனம்.

கணீரென்ற குரலில் வேதம் சொல்லும் போது ஆனந்தமாக இருக்கும். என்ன செய்வது? திடீரென்று பிராணன் போய் விட்டால் என்ன செய்வது? என்று "போதும்" என்று சொல்லி விடுவேன்.முடிந்தவரை ஸகாயம் செய்து வந்தேன். இப்படி ஒரு பழக்கம்---ஸந்தானராமன்(கட்டுரையாளர்)

ஒருநாள் காலை, அவருடைய வயதான தாயாருடன் என்னிடம் வந்தார்." நான் காஞ்சிபுரத்திற்குப் போகிறேன். பெரியவாளைத் தரிசனம் செய்து, 'இப்படி வேத அத்யயனம் செய்து, சன்னியாசியான ஒருவருடைய பிள்ளை, சாப்பாட்டுக்கு இல்லாமல் தவிக்கிறானே? எனக்கு வழி செய்யக் கூடாதா?" என்று கேட்கப் போகிறேன். அம்மாவும் கூட வருகிறார்" என்றார்.

நான்(ஸந்தானராமன்), " ஏன் பெரியவாளைத் தொந்தரவு செய்கிறாய்? நானே ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். " இல்லை, நான் பெரியவாளைப் பார்க்க வேண்டும்.எனக்கு டிக்கெட் செலவுக்குப் பணம் கொடுத்தால் தேவலை" என்றார். பஸ் டிக்கெட் வாங்கிக் கொடுத்து,செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். இதர வேறு ஜோலிகளில் இதை நான் மறந்து விட்டேன்.

பத்து நாட்களுக்குப் பின் ஒருநாள் காலையில் தாயாருடன், என் வியாபார ஸ்தலத்தில் எனக்காகக் காத்திருந்தார். "காஞ்சிபுரம் போய்விட்டு வந்தாச்சா? பெரியவா என்ன சொன்னா?" என்று கேட்டேன்.

"என்ன சொன்னா !. 'நான் ஸந்நியாசியாத்துப் புள்ளை, வேத அத்யயனம் பூர்ணமாகப் பண்ணினவன். எந்த இடத்தில்  வேண்டுமானாலும் கேளுங்கள்; நான் சொல்வேன் என்றேன். என் சிரமத்திற்கு ஏதாவது உதவி பண்ண வேண்டும்" என்றேன். "இங்கேயே தாயாருடன் இரு சொல்கிறேன்" என்றார்கள் பெரியவா. பிறகு தினம் காலை, மாலை தரிசனம் செய்து இதையே சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று நேற்று சாயந்திரம், "நீ ஊருக்குப் போ" என்றார் பெரியவா. ஒரு பையனிடம் டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்லி என்னையும், அம்மாவையும் திரும்பிப் போகச் சொல்லிவிட்டார். பெரியவாளும் கையை விரிச்சுட்டா."

இதை சொல்லும் போது கண் கலங்கியது. எனக்கும் சங்கடமாயிருந்தது.பின் அவர்களை கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.

மணி பதினொன்று இருக்கும். காஞ்சிபுரத்திலிருந்து வரும்போது, கையில் கொண்டுவந்த அதே துணிப்பையுடன் இவர் மட்டும் (ஸ்ரௌதி பிள்ளை)  தனியே, என் வியாபார ஸ்தலத்தில் பிரசன்னமானார். முகத்தில் தெளிவு,ஒரே அழுகை,விக்கல், பேச முடியாமல் தவித்தார்.

சற்று நிதானித்து, 'என்ன? சொல்' என்றேன்.'பெரியவாளைப் பற்றித் தப்பா பேசிட்டேன்'னு சொல்லி நடுக்கடையில் திடீரென்று நமஸ்காரம் செய்தார்.

"என்ன?" என்று மறுபடி கேட்டேன். ஆச்சரியமான விவரங்கள் கிடைத்தன.

காலை ஒன்பது மணிக்கு என்னைப் பார்த்து விட்டு, தாயாருடன் பஸ்ஸில் ஊருக்குப் போயிருக்கிறார். தெரு முனையில் இவரைக் கண்டவுடன், தெருக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, "உங்காத்து திண்ணையிலே நேற்று காலை யாரோ, ஒரு வண்டி நெல் கொண்டு வந்து, இறக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். நீ வரும்வரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுச் சாவியை அம்மாவிடம் கொடுத்து விட்டு, அடுத்த பஸ்ஸைப் பிடித்து என்னைப் பார்க்க வந்துள்ளார்.

ஒரேஅழுகை,விம்மல். "பெரியவாள், தெய்வம் தெரியாமல் சொல்லி விட்டேன்."

பிறகு சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பினேன். பின்னால், நான் காஞ்சிபுரம் போனபோது விவரம் தெரிந்தது. இவர் சென்ற அன்றைக்கே, பெரியவா இவரிடம் கருணையும், அனுக்ரஹமும் பண்ண நிச்சயத்திருந்தார்கள்.

கும்பகோணம் பிரபல மிராசுதார் ஒருவர் தரிசனம் பண்ண வந்திருக்கிறார். அவரிடம் விவசாயம், அந்த வருஷக் கணக்கு பற்றி அவர்களுக்கே உரிய இனிய பாணியில் விசாரித்திருக்கிறார்கள் பெரியவா. அவரிடம், 'எனக்கு ஒரு வண்டி நெல் தருவாயா?' என்று கேட்டிருக்கிறார்கள், அவரும் 'தருகிறேன்' என்றார்.

"நீ இப்பொழுது காமாக்ஷியைத் தரிசனம் பண்ணிவிட்டு மறுபடி இங்கே வா" என்று உத்தரவு செய்துள்ளார்கள்.  அவர்போனவுடன் நமது கதாநாயகரிடம் ஊர்-அட்ரஸ்-தெருவில் எத்தனாவது வீடு-வாசலில் திண்ணை இருக்கிறதா?- என்றெல்லாம் பெரியவா விசாரித்திருக்கிறார்கள்.

மிராசுதார் திரும்பி வந்தவுடன், கிராமம்,வீடு,தெரு அடையாளம் சொல்லி, " அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு வண்டி நெல் இறக்கிவிடு. இன்றே கும்பகோணம் போ, நாளை மாலைக்குள் நெல் போய் சேர்ந்து விடுமா?" என்று கேட்டிருக்கிறார்கள் பெரியவா. மிராசுதார்,"கண்டிப்பாய் சேர்த்து விடுவேன்" என்று கூறியுள்ளார். மிராசுதாரும் கும்பகோணம் சென்று, மறுநாள் காலை ஒரு வண்டி நெல்லை இவர் வீட்டுத் திண்ணையில் இறக்கி விட்டு, தெருவாரிடம் சொல்லி விட்டு  வந்திருக்கிறார்.

இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?

பெரியவாளுடைய கருணையே கருணை!

Thursday, 23 April 2020

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர்.

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர். 

கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. 

ச்ரோத்ரம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறையாக வந்திருப்பதால் அதற்கு “ச்ருதி” என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 

எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். 

‘ழ’வுக்கும், ‘ள’வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. 

காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். 

அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கு ஸ்வரமும் உண்டு. 

அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். 

சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். 

புஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்; 

உச்சரிப்பு தப்பினால் பலனே போய்விடும்

ஓர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். 

நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்
ரேடியோவில் ஒரு wave-length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது? 

மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது? 

இப்படியேதான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது.

வேவ் – லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம்

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம். 
அதனால் நாம் ஏதோ ஒரு மதத்தில், ஸம்ப்ரதாயத்தில் பிறந்திருக்கிறோமென்றால், அதுவே கர்மவசாத் ஈஸ்வரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று அதை வரவேற்று, இதைக் கொண்டே நாம் கர்மாவைப் போக்கிக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
 அவரவர்கள் தாங்கள் பிறந்த ஸம்ப்ரதாயத்தையும் குலாசாரத்தையும் ரக்ஷிக்கிற ஆசார்யார்களின் உபதேசப்படி நடந்தாலே போதும்.

Wednesday, 22 April 2020

கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.! -பாலகிருஷ்ண ஜோஷி

கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.! -பாலகிருஷ்ண ஜோஷி
.
"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"--(மேற்படி பாலக்ருஷ்ண ஜோஷியிடம் என் மனைவி மூக்குத்தி வாங்கியிருக்கிறாள்.2000 ஆண்டு காலமாகி விட்டார்.இந்த விவரம் அவர் மகன் ஸ்ரீதர் ஜோஷியிடம் கேட்டு அறிந்தேன்.பார்க்டவுனில் கடை இருக்கு. வரகூரான்.நாராயணன்).

.
ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, "இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ" என்றார்.
பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக "நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்"
பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!" என்றார்.
ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது "ஏம்பா அழறே?"
"கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே............"
"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"
சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் "பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்குகொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு"
"நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு"
ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் "நீ இன்னும் மெட்ராஸ் போகலை?" தெரியாதவர் போல் கேட்டார்.
"இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்"
"அப்படி என்ன சங்கல்பமோ?" கிண்டலாக கேட்டார்
"கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா"
"சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது" அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை.
ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது
.

"ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?"
"வைர வியாபாரம் பெரியவா"
"ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ......நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ" பச்சைக் கொடி காட்டினார் பெரியவா.
இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் " பாலக்ருஷ்ண ஜோஷி.....நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்......." சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி "பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்" அழுதான்.
"நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்"
"சரி கேக்கறேன்" மனசில்லாமல் ஒத்துக் கொண்டான்.
"அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு.......என்ன புரியறதா?" கறாராக கட்டளையிட்டார்.
மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் "ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?"
"சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது" முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான்.
ஜோஷிக்கு ஒரே அவமானம். கேவி கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த அடுப்பங்கரை பெஞ்சில் படுத்துக் கொண்டான். ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. விடிந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போகணும் என்று தோன்றவில்லை. மத்யான்னம் மடத்துக்கு வந்து சாப்பிட்டான் திரும்ப காமாக்ஷியிடமே போய் உட்கார்ந்தான். இரவு மடத்து அடுப்பங்கரை. பெரியவா பக்கமே போகவில்லை. மூன்றாம் நாள் காலை பெரியவா ஒரு பையனிடம் "ஏண்டாப்பா, ரெண்டு நாளைக்குமுன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷின்னு ஒரு பையன் கைங்கர்யம் பண்ண வந்தானே.........அவனை காணோமே? எங்கடா போய்ட்டான்? ஒருவேளை சொல்லிக்காம மெட்ராஸ் போயிட்டானோ?"
"இல்லே பெரியவா. இங்கதான் இருக்கான்"
"பின்ன ரெண்டு நாளா காணோமேடா..........போய் அவனை அழைச்சிண்டு வா". வந்தான். பெரியவா முன்னால் கூனிக்குறுகி நின்றான். "வா கொழந்தே! எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணோம்? ஒடம்பு கிடம்பு சரி இல்லியோ?".
பதிலே இல்லை.
குழந்தைத்தனமான சிரிப்புடன் "என்கிட்டே ஏதாவது வருத்தமோ........கோபமோ?"
"கோபமெல்லாம் இல்லை பெரியவா.........மனசுக்கு கொஞ்சம் வருத்தம்"
"வருத்தமா! எம்பேர்லையா!!!" ஆச்சர்யமாக கேட்டார். "சொல்லு சொல்லு. ஒன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ!......"
"வேற ஒண்ணும் இல்லை பெரியவா! மொதல் ரெண்டு நாள் என்னையும் ராத்ரிலே மத்த பையன்களோட இங்கியே படுத்துக்கச் சொன்னேளா.....ரொம்ப சந்தோஷமா இருந்தது. திடீர்னு முந்தாநாள் கோட்டை அடுப்புக்கு பக்கத்ல பெஞ்ச்ல போய் படுத்துக்கோ' ...ன்னு சொல்லிட்டேளே! நான் இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாம, குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்க போய் படுத்துக்கச் சொல்லிட்டேளோ.ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதான் ரெண்டு நாளா இங்க வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா" கதறிவிட்டான்.
பெரியவா நிலைமையை புரிந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். மிச்ச பசங்களை வெளியே போகச் சொன்னார். பரம வாத்சல்யத்துடன் ஜோஷியை பக்கத்தில் கூப்பிட்டு
"அடடா.......பாலகிருஷ்ணா........நான் ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்ட பெஞ்ச்ல படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே........நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா ......சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி........நல்ல வேளை. சொன்னியே...அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா"......என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!!
"கொழந்தே! ஜோஷி........இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ....கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா........வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!......" பெரியவா முடிக்கவில்லை.."ஹோ" வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி.
"பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்"
காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் "ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு" ஆசிர்வதித்தார்

Thursday, 19 March 2020

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? - புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா

வன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா . புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன் .

(முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது)

ஒரு சமயம்,ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர, அங்கு வேறு எவருமில்லை. அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர்.ஸ்ரீஸ்வாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை.

வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து கொள்கிறான்.பெரியவாள் கருணை புரியவேண்டும்" என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள். பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறுது நேரம் மௌனமாக இருந்தார்கள். சில நிமிஷங்கள் கழிந்தபின் பேச ஆரம்பித்தார்கள்

.(பெரியவா சொன்ன 7 கதைகள் கீழே)

"இந்த உலகமே பைத்தியக்காரத்தனமான உலகம் தான்.பரமேச்வரனையே, 'பித்தா பிறைசூடி' என்று பாடி ஒரு நாயனார் ஈச்வரனுக்கே பைத்தியக்காரப் பட்டம் கட்டவில்லையா? மதுரையில் ஒரு சமயம், பரமேச்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்தார்.பைத்தியக்காரனைப் போல் ஆடிக்கொண்டும், சேஷ்டைகள் செய்துகொண்டும்,வைகை வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கத்தில் பலருடன் தானும் மண் சுமந்துகொண்டு போனார். அவருடைய சேஷ்டைகளைக் கவனித்த அரசனின் அதிகாரிகள் அவரை அடித்தார்கள். அந்த அடி, அரசன் உள்பட அனைவரின் முதுகிலும் பட்டது.பைத்தியக்கார சேஷ்டையுடன் கூடிய கூலியாள் மறைந்துவிட்டார். இந்தக் கதையை நாம் கேட்டிருக்கிறோமல்லவா?"

"ஆதிசங்கர பகவத்பாதாள் தக்ஷிண தேச யாத்திரை செய்து வரும்போது ஸ்ரீவலி என்ற ஊரில் ஒரு சமயம் தங்கியிருந்தார்.அந்த ஊரில் நிறையப் படித்த ஒருவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பையன், தாய் தந்தை உள்பட யாரிடமும் பேசுவதே இல்லை. ஆசாரியாள் ஊருக்கு வந்ததை அறிந்த பெற்றோர்கள், அந்தப்பையனை ஆசார்யாளிடம் அழைத்துவந்து,தாமும் வணங்கி,பையனையும் வணங்கும்படி செய்து, மகன் உன்மத்தனாக இருப்பதைக் கூறினார்கள்.பகவத்பாதாள் அந்தப்பையனைப் பார்த்து,"ஏனப்பா இப்படி ஜடமாகி இருக்கின்றாய்?" என்று கேட்டார்கள்."நான் ஜடமல்ல" என்று ஆரம்பித்து, வேதாந்தக் கருத்துக்களைக் கொண்ட பல ஸம்ஸ்க்ருதச் செய்யுள்களைப் பாடினான் அவனை சங்கரர் தன்னுடன் விட்டுவிடும்படி பெற்றோர்களிடம் சொல்ல, அப்பையன் ஆசார்யாளுடனே இருந்து, அவரிடம் ஸந்நியாஸம் பெற்று, 'ஹஸ்தாமலகர்' என்று பெயரையும் பெற்று, அவருடைய முக்கிய சிஷ்யர்களில் ஒருவரானார்."

"ஜடபரதரும் புத்திஸ்வாதீனமில்லாதன் என்று நினைத்து,ராஜாவின் பல்லக்கைச் சுமக்கச் சொன்னார்கள். பல்லக்கைத் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி வந்ததால்.அவரை ராஜாவின் சேவகர்கள் அடித்தார்கள். பிற்காலத்தில் அரசனுக்கு, ஜடபரதர் பெரிய ஞானி என்று தெரிந்தது. ராஜாவும்,மற்றவர்களும் அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்டார்கள்

விஷ்ணுபக்தன் ஒருவன் மஹாவிஷ்ணுவைக் காண ஆசை கொண்டு,பைத்தியக்கரத்தனமாக கடல் நீரை மொண்டு கொட்டுவதில் ஈடுபட்ட கதை, -காஞ்சியில், ஊமையாகவும்,பைத்தியம் போலுமிருந்த மூகன் காமாக்ஷி அம்பாளின் அனுக்ரஹத்தால். கவியாக மாறி, அம்பாளின் மீது ஐநூறு ச்லோகம் பாடியவிவரமும், பிறகு - சமீப காலத்தில் காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைப் பகுதியில் பைத்தியம் போல், எது கொடுத்தாலும் சாப்பிடுவார்,ஒன்றும் சாப்பிடமாலும் இருப்பார்; எங்கு வேண்டுமானாலும் படுப்பார். இப்படி அலைந்து திரிந்து கொண்டிருந்தவரான சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றிய கதையையும் அவர்களுக்குப் பெரியவாள் சொன்னார்.அந்தத் தம்பதிகளைக் காட்டிலும், அந்த புத்திஸ்வாதீனமில்லாத பையன் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததை பெரியவாள் கவனித்தார்கள்.

"என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள். ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதிகள், தங்கள் பிள்ளையுடன் வந்தார்கள்.- அந்தப் பையன், ஆறு மாதமாகப் பல் தேய்ப்பதில்லை,சாப்பிடுவதில்லை, துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால் அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை. வேஷ்டியில் அழுக்கு ஏற்படுவதில்லை என்று சொன்னார்கள்.பிறகு கண்ணீர் வடிய, 'அவன் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும் போது, நாங்கள் சாப்பிடுவது மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது'என்றார்கள் ."அவனால் ஏதாவது சிரமம் இருக்கா என்று நான் (பெரியவாள்) கேட்டேன். அதற்கு அவர்கள் உபத்ரம் ஏதுமில்லையென்றும், அவன் யாரிடமும் பேசுவதில்லை என்றும், எப்போதாவது,'ஸ்ரீராம சிவ' என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர் சொன்னார்கள்."இவனும் ஒரு மகான் தான். நீங்கள் சாப்பிடும்போது, கொஞ்சம் சாதம்,குழம்பு ஆகியவைகளை,ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல், பையன் இருக்குமிடத்தில் வைத்துவிடுங்கள். அவன் சாப்பிடாவிட்டால்,சாயங்காலம் யாராவது ஏழைகளுக்குக் கொடுங்கள்" என்று சொன்னேன்.(பெரியவா)

கேட்டுக்கொண்டிருந்த தம்பதிகளையும், பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவா கூறியதாவது

; "வன்முறையில் ஈடுபடும் புத்திஸ்வாதீனமில்லாதவர்களுக்குத்தான் வைத்யம் தேவை.எவருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் பற்றி அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் சொல்லப்போனால் அவர்கள். ஞானிகளாகலாம். அவர்கள் கெடுதி செய்யமாட்டார்கள். பாபகார்யங்களைச் செய்யமாட்டார்கள். அவர்களுக்குத் துவேஷம் கிடையாது. அவர்களைப் பார்க்கும்போது, நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்." "நீ என்னப்பா சொல்கிறாய்?" என்று சிரித்தபடி ஸ்ரீ பெரியவாள் தன் முன் உட்கார்ந்திருந்த அந்தப் பையனை நோக்கிக் கேட்டார்கள்.அந்தப் பையனும் சிரித்தான்

அந்தப் பையனின் பெற்றோர்கள்,ஸ்ரீ பெரியவர்கள், வெகு நேரம் பேசியதைக் கேட்டு, பையனைப் பற்றிய வருத்தமும், மனக்கவலையும் குறைந்தவர்களாக, தெளிவுடனும் ,மனச்சாந்தியும் அடைந்தவர்களக, விடைபெற்றுச் சென்றனர். அருகிலிருந்த பெரியவர்கள் பேசியதனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட பேச்சை மறக்கவே முடியாது.,