Tuesday, 5 May 2020

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன.

 'ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டான்.

'தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான்.
தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.
துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான்.
செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், `"அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார்.
அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான்.
அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது.
அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டு விட்டது.
பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள்.
இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார். அவருக்கு இதெல்லாம் தெரியுமா இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக் கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான்.
ரணகளமாக மாறியிருந்த யுத்த பூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.
ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
யுத்தகளத்தை விட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது.
அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது.
திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தம் எழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான்.
பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள்.
அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி.
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார்.
பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.
பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார்.
நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப் போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்தி விட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார்.
அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது.
அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.
``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.
``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்து வைத்திருக்கிறேன்’’ என்றான்.
கண்ணன் சொன்னதுதான் தாமதம். திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை. என் காலணிகளை நீ சுமப்பதா? என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா" என்றான் கண்ணன்.
பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். *உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக் கொண்டிருப்பாய்*. பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான். ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்து விட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’ என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன.
மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே?
நீங்கள் கண்ணனை நீங்காது நினைத்திருங்கள், மற்றவை அவன் கடமை.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

 (ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)

நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)
 

தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.
 

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.

அந்த வரிசையில நிற்கற சமயத்துலயே அவரோட
கண்ணுலேர்ந்து வழிஞ்சுண்டு இருந்த நீர், அவர்
ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கார்ங்கறதை
உணர்த்தித்து. வழக்கமா, யாராவது பெரிய சங்கடத்தோட வந்திருக்கான்னு தெரிஞ்சா, மகாபெரியவா அதை தானாவே உணர்ந்து, அவாளைக் கூப்பிடச் சொல்லி முன்கூட்டியே தரிசனம் தந்து அவாளுக்கு ஆறுதலோ,
ஆலோசனையோ சொல்லி அனுப்புவார்.அதே மாதிரி, இவரையும் ஆசார்யா கூப்பிடுவார்னு வழக்கமா வர்றவா பலரும் நினைச்சா. ஆனா,அப்படி எதுவும் நடக்கலை.


வரிசை நகர்ந்து தன்னோட முறை வந்து மகாபெரியவா முன்னால போய் நின்னதும் ,அதுவரைக்கும் சத்தம் இல்லாம
அழுதுண்டு இருந்தவர்,வாய்விட்டுக் கதறி, 'ஓ'வென்னு அழ ஆரம்பிச்சுட்டார்.,சில நிமிஷத்துக்கு அப்புறம்.


"பெரியவா...நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்..
என்னோட கிட்னி ரெண்டும் சரியா வேலை செய்யலைன்னு டாக்டரெல்லாம் சொல்றா. ஆறேழு மாசமா மருந்தெல்லாம் எடுத்துக்கறேன்.ஆனா, ஒரு துளி முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகிண்டுதான் இருக்குன்னு சொல்றா..
என்அக்கு என்ன பண்ண்றதுன்னே தெரியலை.. அதான் இங்கே ஓடி வந்திருக்கேன்...!" தழுதழுப்பா சொன்னார்.


 "ஓஹோ...ஒனக்குப் பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் நல்லதெல்லாம் ஞாபகத்துக்கு வருதோ?" வழக்கமா கஷ்டம் பிரச்னைன்னு வர்றவாகிட்டே கொஞ்சம் ஆறுதலா பேசக்
கூடிய மகாபெரியவா, அவர்கிட்டே ஏதோ கொஞ்சம்
கடுமையாவே பேசினார்


வந்தவர்,கையைப் பிசைஞ்சுண்டு எதுவும் பேசாம
தலைகுனிஞ்சு நிற்க ஆசார்யாளே பேசத் தொடங்கினார்.


"தானம்,தர்மம்,நல்ல காரியங்கள். இதெல்லாம் அந்தக் காலத்துல பலரும் பண்ணிண்டு இருந்தா. நாடும்,அவா அவா குடும்பமும் செழிப்பா இருந்தது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சுது.சுபிட்சமும் நிலவித்து. ஆனா இப்போ,முன்னோர்கள்
என்ன்வோ முட்டாள்தனமா செலவு பண்ணிட்டதா
நெனைச்சுண்டு அவா செஞ்ச தர்மகாரியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டா இந்தத் தலைமுறைக்காரா.


 எப்போ தர்ம காரியங்களைத் தடுத்து நிறுத்தறோமோ அப்பவே இந்த மாதிரி சங்கடமெல்லாம் தலைதூக்கறதுக்கு நாமளே வழி செஞ்சு விட்டுடறோம். அதெல்லாம் வந்ததுக்கு அப்புறம்
 

வந்துடுத்தே வந்துடுத்தேன்னு பிராயச்சித்தம் தேடறோம்!" கொஞ்சம் கடுமையாகவே சொன்னார்,மகாபெரியவா

வந்தவர் அப்படியே மகாபெரியவர் திருவடியில விழுந்தார். ".என்னை மன்னிச்சுடுங்கோப்பெரியவா. என்னோட முன்னோர்கள் மாசத்துக்கு ஒருதரம் அன்னதானம் செய்யறதையும்,நிரந்தரமா தண்ணீர்ப் பந்தல் வைக்கறதையும் வழக்கமா வைச்சிருந்தா. அதுக்காக தனியா இடமெல்லாம் கூட இருந்தது. நான் பாவீ! அதெல்லாம் வீண் விரயம்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு,அந்த இடத்தையும் வித்துட்டேன்..! அந்தப் பாவம்தான் போல இருக்கு எனக்கு. இப்படி ஒரு தீராக் கஷ்டம் வந்துடுத்து...!"
சொன்னவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.

ஒரு சில நிமிஷத்துக்கு அப்புறம்,"பெரியவா, நான் நிறுத்தின எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிச்சுடறேன். எனக்கு நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணினாலே போதும்.இந்த கிட்னி பிரச்னையை எனக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்கறேன்!:
 

தழுதழுக்கச் சொன்னார்

அன்பே வடிவான தெய்வம் யாரையாவது தண்டிக்க நினைக்குமா என்ன? அது நினைப்பதெல்லாம் தவறை உணரணும் என்பதைத்தானே..! தவறை உணர்ந்தாலே மன்னிப்பு அருளும் மகத்தானது அல்லவா தெய்வம்! வந்தவரை மன்னிச்சுட்டதுக்கு
அடையாளமா வாத்ஸல்யமா பார்த்தார் மகாபெரியவா.


"நாட்டு மருந்துக் கடையில வசம்புன்னு ஒரு மருந்து விற்பா... பிள்ளைவளர்ப்பான்னு அதுக்கு சூசகமான பேரு உண்டு. சந்தனக் கல்லுல உரைச்சு, தினமும் உன் தொப்புளைச் சுத்திப் போட்டுக்கோ..!" சொன்ன பெரியவா, ஆசிர்வதிச்சு அவரை அனுப்பினார்.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிஞ்சிருக்கும்.ரொம்ப சந்தோஷமா வந்தார் அந்த பக்தர்.ஆசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

"பெரியவா,நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன் .நேத்திக்கு என்னை பரிசோதிச்ச டாக்டர்கள், 'சிறுநீரகத்துல எந்தக் குறையுமே இல்லை.இது என்ன அதிசயம்!'னு கேட்கறா...

'சாட்சாத் சம்புவாகவே (சிவபெருமான்) நடமாடிண்டு இருக்கற மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம்!னு சொன்னேன்..!" சொல்லித் தழுதழுத்தார்.

"நானெல்லாம் ஒண்ணும் பண்ணலை. ஒன் முன்னோர் பண்ணின தர்மகார்யத்தோட புண்ணியம் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு. இனிமேலாவது அதையெல்லாம் விடாம பண்ணு...க்ஷேமமா
இருப்பே..!" ஆசிர்வாதம் பண்ணின ஆசார்யாளோட குரல், அங்கே இருந்தவா எல்லாருக்கும் கடவுளோட குரலாகவே ஒலிச்சுது!.

Wednesday, 29 April 2020

63 நாயன்மார்களை பற்றிய வரலாறு மிக எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது

63 நாயன்மார்களை பற்றிய வரலாறு மிக எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது

1.திருநீலகண்ட நாயனார்:
 

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார்:
 

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்:
 

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்:
 

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்


5.விறல்மிண்டர்:
 

சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6.அமர்நீதியார்:
 

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7.எறிபத்தர்:
 

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின் தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத் துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்:
 

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்:
 

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்:
 

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்:
 

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்:
 

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர்:
 

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி நாயனார்:
 

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.

15.முருக நாயனார்:
 

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி:
 

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்:
 

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்:
 

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்:
 

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்:
 

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்:
 

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்:
 

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.


23.காரைக்கால் அம்மையார்:
 

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்:
 

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25.திருநீலநக்கர்:
 

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26.நமிநந்தி அடிகள்:
 

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:
 

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்:
 

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:
 

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர் விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30.தண்டி அடிகள்:
 

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31.மூர்க்கர்:
 

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32.சோமாசிமாறர்:
 

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். உலகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்:
 

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34.சிறப்புலி:
 

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:
 

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்:
 

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37.கணநாதர்:
 

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:
 

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழ நாயனார்:
 

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர். சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40.நரசிங்க முனையரையர்:
 

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41.அதிபத்தர்:
 

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.


42.கலிக்கம்பர்:
 

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்:
 

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி:
 

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்:
 

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்:
 

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47.காரி:
 

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்:
 

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்:
 

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்:
 

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார்:
 

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி:
 

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை நாயனார்:
 

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை:
 

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55.கோட்புலி:
 

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்:
 

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலை விட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.


57.மங்கையர்க்கரசியார்
 

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்:
 

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.


59.கோச்செங்கட் சோழர்:
 

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
 

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்:
 

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்:
 

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்:
 

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?
 

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மாரின் பட்டியல்
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

* பூ உற்பத்தி செய்பவர்
* மாலையாக கட்டுபவர்
* அதனை விற்பனை செய்பவர்
*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை,காய் வகை கொடுக்கும் விவசாயப்பெருமக்கள் மற்றும் வியாபாரிகள்.
* அர்ச்சகர்
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர்,
* தேங்காய் விற்பனைசெய்பவர்.
* ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
* சந்தனம்,குங்குமம், ,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* வாழைமரம் வளர்ப்பவர்கள்
* அவற்றைவிற்பனைசெய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்
* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்

* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்
முகாமையாளர் வரை
* ஓதுவார்கள்,
* நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
* சிற்ப கலைஞர்கள்
* ஓவியர்கள்
* கட்டட கலைஞர்கள்
* ஆசாரிமார்கள்
* விசேட காலங்களில் தொழில்புரியும்    மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது.

என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை உருவாக்கினார்கள்.

Friday, 24 April 2020

பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."



"பெரியவாள், தெய்வம், தெரியாமல் சொல்லி விட்டேன்."

சிரமத்திற்கு உதவி கேட்கப்போன, ஸ்ரௌதிகளின் பிள்ளையிடம், 'நீ ஊருக்குப் போ' என்று பெரியவா சொன்னதை, 'கையை விரிச்சுட்டா" என்று தப்பாக எண்ணியவருக்கு அனுக்ரஹ சம்பவம்.

(இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?)



சொன்னவர்-தஞ்சாவூர் ஸந்தான ராமன்.
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புரியாத விளையாட்டுகள் விளையாடுவதில் பெரியவாளுக்கு ஈடு இணையே கிடையாது.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமம். அங்கே வாழ்ந்தவர் சாம்பசிவ ஸ்ரௌதிகள்; பூர்ணமாக அத்யயனம் செய்தவர். அந்திய காலத்தில் அவர் ஆசிரமம் வாங்கிக் கொண்டார். அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் பூர்ணமாக அத்யயனம் பண்ணினவர். அவருக்கு இதயம் மிகவும் பலஹீனம். சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடம் வேத பாராயணம் சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கும் பயமா இருக்கும்.  இதனால் அவரை இதர வைதிகர்கள் காரியங்களுக்குக் கூப்பிடுவதில்லை. தாயாரும் அவரும் கஷ்ட ஜீவனம்.

கணீரென்ற குரலில் வேதம் சொல்லும் போது ஆனந்தமாக இருக்கும். என்ன செய்வது? திடீரென்று பிராணன் போய் விட்டால் என்ன செய்வது? என்று "போதும்" என்று சொல்லி விடுவேன்.முடிந்தவரை ஸகாயம் செய்து வந்தேன். இப்படி ஒரு பழக்கம்---ஸந்தானராமன்(கட்டுரையாளர்)

ஒருநாள் காலை, அவருடைய வயதான தாயாருடன் என்னிடம் வந்தார்." நான் காஞ்சிபுரத்திற்குப் போகிறேன். பெரியவாளைத் தரிசனம் செய்து, 'இப்படி வேத அத்யயனம் செய்து, சன்னியாசியான ஒருவருடைய பிள்ளை, சாப்பாட்டுக்கு இல்லாமல் தவிக்கிறானே? எனக்கு வழி செய்யக் கூடாதா?" என்று கேட்கப் போகிறேன். அம்மாவும் கூட வருகிறார்" என்றார்.

நான்(ஸந்தானராமன்), " ஏன் பெரியவாளைத் தொந்தரவு செய்கிறாய்? நானே ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். " இல்லை, நான் பெரியவாளைப் பார்க்க வேண்டும்.எனக்கு டிக்கெட் செலவுக்குப் பணம் கொடுத்தால் தேவலை" என்றார். பஸ் டிக்கெட் வாங்கிக் கொடுத்து,செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினேன். இதர வேறு ஜோலிகளில் இதை நான் மறந்து விட்டேன்.

பத்து நாட்களுக்குப் பின் ஒருநாள் காலையில் தாயாருடன், என் வியாபார ஸ்தலத்தில் எனக்காகக் காத்திருந்தார். "காஞ்சிபுரம் போய்விட்டு வந்தாச்சா? பெரியவா என்ன சொன்னா?" என்று கேட்டேன்.

"என்ன சொன்னா !. 'நான் ஸந்நியாசியாத்துப் புள்ளை, வேத அத்யயனம் பூர்ணமாகப் பண்ணினவன். எந்த இடத்தில்  வேண்டுமானாலும் கேளுங்கள்; நான் சொல்வேன் என்றேன். என் சிரமத்திற்கு ஏதாவது உதவி பண்ண வேண்டும்" என்றேன். "இங்கேயே தாயாருடன் இரு சொல்கிறேன்" என்றார்கள் பெரியவா. பிறகு தினம் காலை, மாலை தரிசனம் செய்து இதையே சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று நேற்று சாயந்திரம், "நீ ஊருக்குப் போ" என்றார் பெரியவா. ஒரு பையனிடம் டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்லி என்னையும், அம்மாவையும் திரும்பிப் போகச் சொல்லிவிட்டார். பெரியவாளும் கையை விரிச்சுட்டா."

இதை சொல்லும் போது கண் கலங்கியது. எனக்கும் சங்கடமாயிருந்தது.பின் அவர்களை கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.

மணி பதினொன்று இருக்கும். காஞ்சிபுரத்திலிருந்து வரும்போது, கையில் கொண்டுவந்த அதே துணிப்பையுடன் இவர் மட்டும் (ஸ்ரௌதி பிள்ளை)  தனியே, என் வியாபார ஸ்தலத்தில் பிரசன்னமானார். முகத்தில் தெளிவு,ஒரே அழுகை,விக்கல், பேச முடியாமல் தவித்தார்.

சற்று நிதானித்து, 'என்ன? சொல்' என்றேன்.'பெரியவாளைப் பற்றித் தப்பா பேசிட்டேன்'னு சொல்லி நடுக்கடையில் திடீரென்று நமஸ்காரம் செய்தார்.

"என்ன?" என்று மறுபடி கேட்டேன். ஆச்சரியமான விவரங்கள் கிடைத்தன.

காலை ஒன்பது மணிக்கு என்னைப் பார்த்து விட்டு, தாயாருடன் பஸ்ஸில் ஊருக்குப் போயிருக்கிறார். தெரு முனையில் இவரைக் கண்டவுடன், தெருக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, "உங்காத்து திண்ணையிலே நேற்று காலை யாரோ, ஒரு வண்டி நெல் கொண்டு வந்து, இறக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். நீ வரும்வரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுச் சாவியை அம்மாவிடம் கொடுத்து விட்டு, அடுத்த பஸ்ஸைப் பிடித்து என்னைப் பார்க்க வந்துள்ளார்.

ஒரேஅழுகை,விம்மல். "பெரியவாள், தெய்வம் தெரியாமல் சொல்லி விட்டேன்."

பிறகு சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பினேன். பின்னால், நான் காஞ்சிபுரம் போனபோது விவரம் தெரிந்தது. இவர் சென்ற அன்றைக்கே, பெரியவா இவரிடம் கருணையும், அனுக்ரஹமும் பண்ண நிச்சயத்திருந்தார்கள்.

கும்பகோணம் பிரபல மிராசுதார் ஒருவர் தரிசனம் பண்ண வந்திருக்கிறார். அவரிடம் விவசாயம், அந்த வருஷக் கணக்கு பற்றி அவர்களுக்கே உரிய இனிய பாணியில் விசாரித்திருக்கிறார்கள் பெரியவா. அவரிடம், 'எனக்கு ஒரு வண்டி நெல் தருவாயா?' என்று கேட்டிருக்கிறார்கள், அவரும் 'தருகிறேன்' என்றார்.

"நீ இப்பொழுது காமாக்ஷியைத் தரிசனம் பண்ணிவிட்டு மறுபடி இங்கே வா" என்று உத்தரவு செய்துள்ளார்கள்.  அவர்போனவுடன் நமது கதாநாயகரிடம் ஊர்-அட்ரஸ்-தெருவில் எத்தனாவது வீடு-வாசலில் திண்ணை இருக்கிறதா?- என்றெல்லாம் பெரியவா விசாரித்திருக்கிறார்கள்.

மிராசுதார் திரும்பி வந்தவுடன், கிராமம்,வீடு,தெரு அடையாளம் சொல்லி, " அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு வண்டி நெல் இறக்கிவிடு. இன்றே கும்பகோணம் போ, நாளை மாலைக்குள் நெல் போய் சேர்ந்து விடுமா?" என்று கேட்டிருக்கிறார்கள் பெரியவா. மிராசுதார்,"கண்டிப்பாய் சேர்த்து விடுவேன்" என்று கூறியுள்ளார். மிராசுதாரும் கும்பகோணம் சென்று, மறுநாள் காலை ஒரு வண்டி நெல்லை இவர் வீட்டுத் திண்ணையில் இறக்கி விட்டு, தெருவாரிடம் சொல்லி விட்டு  வந்திருக்கிறார்.

இந்த விளையாட்டு, கிருஷ்ண பரமாத்மா குசேலருக்கு அனுக்ரஹம் செய்த பாணியா?

பெரியவாளுடைய கருணையே கருணை!

Thursday, 23 April 2020

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர்.

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர். 

கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. 

ச்ரோத்ரம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறையாக வந்திருப்பதால் அதற்கு “ச்ருதி” என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 

எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். 

‘ழ’வுக்கும், ‘ள’வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. 

காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். 

அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கு ஸ்வரமும் உண்டு. 

அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். 

சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். 

புஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்; 

உச்சரிப்பு தப்பினால் பலனே போய்விடும்

ஓர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். 

நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்
ரேடியோவில் ஒரு wave-length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது? 

மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது? 

இப்படியேதான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது.

வேவ் – லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம்

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம். 
அதனால் நாம் ஏதோ ஒரு மதத்தில், ஸம்ப்ரதாயத்தில் பிறந்திருக்கிறோமென்றால், அதுவே கர்மவசாத் ஈஸ்வரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று அதை வரவேற்று, இதைக் கொண்டே நாம் கர்மாவைப் போக்கிக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
 அவரவர்கள் தாங்கள் பிறந்த ஸம்ப்ரதாயத்தையும் குலாசாரத்தையும் ரக்ஷிக்கிற ஆசார்யார்களின் உபதேசப்படி நடந்தாலே போதும்.