Wednesday 5 February 2020

யாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும் என்பதை பக்தனுக்கு உணர்த்திய மஹா பெரியவா.


யாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும் என்பதை பக்தனுக்கு உணர்த்திய மஹா பெரியவா.

மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். வந்தவர் வரிசையில் நின்னார். தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான் இருந்தது.

பெரியவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு. திட்டியும் பிரயோஜனமும் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?” அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சிநாம எதுவுமே சொல்லல, ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்றாரேன்னு ஆச்சரியம்.

பெரியவா! குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவளுக்கெல்லாம் கேட்குறதுக்கு முன்னாலேயே கொடுக்குற சாமி எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்றார்? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் மகான், “ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா. சிலர் தலைவலின்னு வருவா, சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். இவாள்லாம் அங்கே இருக்கறச்சே பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா, இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ, யாருக்கு சட்டுனு சிகிச்சை பண்ணலைன்னா அப்புறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்கப் போயிடுவா.

அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தவாளை டாக்டர்கள் அலட்சியப் படுத்தபடுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே, யாருக்கு எப்போ உதவணும்கிறது தெரியறதுன்னா, பகவானுக்கு யாரோட பிரச்சனையை உடனடியா தீர்க்கணும்ன்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா, உன்னை விட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார். அதுக்குள்ளே அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”

பெரியவா சொல்லச் சொல்ல, அந்த நபர் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வடிஞ்சது. அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம். மனஅழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!

No comments:

Post a Comment