Monday, 24 August 2020

வாஞ்சிநாதன்-ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது வீர சாகசத்தால் ஈர்த்த புரட்சி வீரர் (1886 - 1911)

வாஞ்சிநாதன்-ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது வீர சாகசத்தால் ஈர்த்த புரட்சி வீரர் (1886 - 1911)
 
வாஞ்சி என்று அறியப்படும் வாஞ்சிநாதன் எனும் புரட்சி வீரன் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதன் மூலமாக சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம் பெற்றார்.
1886 ஆம் ஆண்டு செங்கோட்டையில் ரகுபதி ஐயருக்கும் ருக்மணி அம்மாளுக்கும் வாஞ்சிநாதன் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரன் என்பதாகும்.இளமைக்காலத்தில் இவர் மிகவும் அமைதியான, கூச்ச சுபாவம் உள்ள சிறுவனாகவே இருந்துள்ளார் .படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ படிப்பும் , பரோடா பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்திருந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவருடைய பெற்றோர் இவரை பொன்னம்மாள் என்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதன் பிறகு நல்லதொரு அரசாங்க வேலையும் இவருக்குக் கிடைத்தது.
திருவிதாங்கூர் காட்டிலாகா துறையில் இவருக்கு எழுத்தராக வேலை கிடைக்க இவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் .திருவிதாங்கூரில் இவர் தனது மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் வ .உ. சிதம்பரம் பிள்ளை போன்றோர் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் விஷயங்களை அறிந்து கொண்டார். 1908 ஆம் ஆண்டில் மார்ச் 12ஆம் தேதி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்த தேசபக்த வீரர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. நகரம் முழுவதும் ஆவேசம் கொண்ட மக்களின் எதிர்ப்புப் பேரணிகளும் ,போராட்டங்களும் ஆங்கிலேய போலீசாரால் மிகவும் அராஜகமான முறையில் அடக்கப்பட்டன. இத்தகைய கடுமையான போலீஸ் அடக்கு முறைக்கு காரணமான திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரை மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான். இதுமட்டுமன்றி ஆஷ் துரையின் கடுமையான நெருக்குதல் களினால் சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் கம்பெனியும் நஷ்டமடைந்து இழுத்து மூடப்பட்டது . இத்தகைய காரணங்களினால் தேசபக்தர்கள் ஆஷ் துரையின் மீது கடும் கோபம் கொண்டு இருந்தனர்.
ஆஷ் துரை கொல்லப்படுவதற்கு முக்கிய பின்னணியாக செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ஆவார். இவர் 1910 இல் சென்னை மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்து இரகசியமான முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சி படை வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியும் அளித்து வந்தார். இந்த காலகட்டத்தில்தான் இவரோடு தொடர்புக்கு வந்த வாஞ்சிநாதனும் ஆயுதப்பயிற்சி பெற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபடத் தொடங்கினான் .நீலகண்ட பிரம்மச்சாரியோடு வாஞ்சிநாதன் , சங்கர கிருஷ்ண ஐயர் ஆகிய புரட்சி வீரர்கள் ஒன்றிணைந்து பாரதமாதா சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலமாக செல்வாக்கு மிகுந்த ஆங்கிலேயர்களை தீர்த்து கட்டுவதற்கான திட்டங்களில்  ஈடுபட்டனர்.
 
1911 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் ஆஷ் துரையை தீர்த்து கட்டுவதற்கான முன்னேற்பாடுகளில் வாஞ்சிநாதன் இறங்கினார் . அதன் முதல் கட்டமாக தன்னுடைய அரசாங்கப் பணியிலிருந்து மூன்று மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் தங்கியிருந்த வ வே.சு ஐயரை சென்று சந்தித்தார் . ஐயர் அவர்கள் ஏற்கனவே ஆங்கிலேய காவல்துறையின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்தவர் . இது மட்டுமன்றி ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரமான கருத்துகளையும் கொண்டிருந்தார். ஐயரவர்கள் வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கி மூலம் குறி பார்த்து சுடுவதற்கான  பயிற்சியை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சிதம்பரனாரை சிறையில் அடைத்தது, சுதேசிக் கப்பல் கம்பெனியை நஷ்டம் அடையச் செய்தது, பொதுமக்கள் மீது அராஜகமான அடக்குமுறையை ஏவிவிட்டது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆஷ் துரையை தீர்த்துக்கட்ட வேண்டும் என்கிற அவருடைய திட்டத்தை வ. வே.சு ஐயர் இடம் தெரிவித்து வாஞ்சி அவரின் ஆசியும் பெற்றார். இங்கே பாண்டிச்சேரியில் இருந்த நேரத்திலே சொந்த ஊரில் வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தையானது இறந்துவிட்ட சூழ்நிலையிலும் அவரால் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கிடையே துணை கலெக்டராக இருந்த ஆஷ் துரை பொறுப்பு கலெக்டர் பதவிக்கு மாற்றப்பட்டு இருந்தான்.
வாஞ்சிநாதனின் திட்டம் செயல்படுவதற்கான நேரம் கனிந்து வந்தது. 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை பயணம் செய்த ரயில் வண்டி மணியாச்சி ரயில் சந்திப்பில் நின்றது. இதனை முன்கூட்டியே எதிர்பார்த்து மணியாச்சி ரயில் நிலையத்தில் தனது கைத்துப்பாக்கியுடன்  காத்திருந்த வாஞ்சிநாதன் முதலாம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையின் ரயில் பெட்டி யில் விறுவிறு என்று ஏறினார் . ரயில் பெட்டியில் இருந்த அவர் தான் கலெக்டர் ஆஷ்  என்பதை உறுதி செய்து கொண்ட பின்னால் மிக நெருக்கத்தில் வைத்து தன்னுடைய கைத்துப்பாக்கியால் அவனைச் சுட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத ஆஷ் நிலைகுலைந்து கீழே விழுந்தான். மிக நெருக்கத்தில் வைத்து சுடப்பட்டதால் அவன் உடனடியாக உயிரிழந்தான். பிளாட்பாரத்தில் தாவி குதித்த வாஞ்சிநாதன் போலீசார் அவரை பிடிக்கும் முன்பாக அங்கிருந்த கழிவறையின் உள் ளே நுழைந்து, துப்பாக்கியை வாயில் நுழைத்துக் கொண்டு மீதமிருந்த ஒரு தோட்டாவால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். இவ்விதமாக தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெற்று தன்னுடைய இன்னுயிரையும் பாரத அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார். இன்றும் இவருடைய இந்த வீர சாகசச் செயலை நினைவுபடுத்தும் விதமாக மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பானது "வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பு"என்றே அறியப்படுகிறது.

No comments:

Post a Comment