Monday, 29 July 2019

“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” - மஹா பெரியவா

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” - மஹா பெரியவா

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ' என்பது ' ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.
 

ஸ்வஸ்தி வசனம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளான நம் ஆச்சார்யர்களை அனுதினமும் ஆத்மார்த்தமாக ஸ்மரிக்கையிலே ஸ்வஸ்தி வசனம் சொல்லி த்யானித்து நமஸ்கரிக்கின்றோமல்லவா... அதற்குண்டான அர்த்தத்தை அடியேன் அறிந்தவண்ணமாக இன்றையதினம் பகிர்கின்றேன்.

ஸ்வஸ்தி வசனம்

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித -ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமத் ஏகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத-
ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே,
சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம், நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்,அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம், ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம: |

பொருள்:-

ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர ஸ்வாமியே போற்றி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஆச்சார்யர்களையும் அவர்கள் தம் திருப்பாதங்களையும் வணங்குகிறேன்.

ஸ்வஸ்திஸ்ரீ அகில பூமண்டலங்களுக்கு அலங்காரமாய், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் ஸேவிக்கப்பெற்று, ஸ்ரீகாமாக்ஷீ தேவியோடு விளங்கும் ஸ்ரீமத் ஏகாம்ரநாதருடைய, ஸ்ரீமஹாதேவியோடு விளங்கும் ஸ்ரீஹஸ்திகிரி நாதருடைய ஸான்னித்யத்தோடு கூடிய க்ஷேத்திரமான ஸத்யவ்ரதம் என்ற பெயர் கொண்ட காஞ்சீ திவ்ய க்ஷேத்திரத்திலே சாரதாமடத்தில் வீற்றிருப்பவர்களாகவும் ஒப்புவமையில்லாத அமிர்தத்துக்கு சமானமான இனிமையையுடையதான கமலாஸனருடைய (ப்ரும்மாவினுடைய) தேவியின் (ஸரஸ்வதியின்) திருமுடியில் அலர்ந்த மல்லிகை மாலையினின்று பெருகும் மகரந்த அருவி போன்ற சொல்மாலைகளாலே விளங்குகின்ற ஆனந்தத்தால் நிறைந்த புத்திமான்களாலே சூழப்பெற்றவர்களாகவும், சதாசர்வகாலமும் அத்வைத வித்யையிலேயே திளைத்து இன்புறுவோர்களாகவும், இடைவிடாது அலங்கரித்துக் கொண்டிருக்கும் சமதமங்களாலே பெரியோர்களாய் விளங்குவோர்களாகவும், எல்லா புவனசக்ரங்களுக்கும் ப்ரதிஷ்டை அளிப்பதான ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனத்தோடு ப்ரஸித்தமான புகழால் அலங்கரிக்கப் பெற்றவர்களாகவும், பாஷண்ட ஸமூஹங்களாகிய ஸகல கண்டகங்களையும் எடுத்தெறிவதாலே செம்மையாக்கப் பெற்றவையான வேதவேதாந்த மார்க்கங்களாகிய ஷண்மதங்களையும் ப்ரதிஷ்டித்த ஆசார்யர்களாகவும் விளங்கும் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யர்களான ஸ்ரீஜகத்குரு ஸ்ரீமத்சங்கர பகவத்பாதாசார்யர்களின் அதிஷ்டானத்திலே ஸிம்ஹாசனத்தில அபிஷிக்தர்களான ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி எனும்  உன்னதமான ஸன்யாச ச்ரேஷ்டர்களுடைய அந்தேவாஸிவர்யர்களான (வழித்தோன்றலாகிய) ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதர்களையும், ததந்தேவாஸிவர்யர்களான (அவ்வழியிலேயே விளங்கும்) ஸ்ரீமத் சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதர்களையும் அவர்களுடைய நளினமான ம்ருதுவான பாதாரவிந்தங்களையும் ஸ்மரித்துக் கொண்டு, இரு கரங்களையும் சிரசிற்கு மேலாகத் தூக்கிக் கொண்டு வணங்குகிறேன்.

அவ்யாஜ கருணையோடு இத்தகையதொரு பாக்கியம் நல்கிய ஸ்ரீசரணாளுக்கு நமஸ்காரம்...நமஸ்காரம்...நமஸ்காரம்.

Audio can be listened by clicking the below link.

http://www.kamakoti.org/kamakoti/details/swasthi%20vachakam.html

இனி பிரதி தினமும் இந்த வசனத்தைச் சொல்கையிலே அதனுடைய அர்த்தத்தை மனதார ஸ்மரித்துக் கொண்டு நமஸ்கரிப்போமே!

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா  கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்