Wednesday, 5 February 2020

யாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும் என்பதை பக்தனுக்கு உணர்த்திய மஹா பெரியவா.


யாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும் என்பதை பக்தனுக்கு உணர்த்திய மஹா பெரியவா.

மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். வந்தவர் வரிசையில் நின்னார். தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான் இருந்தது.

பெரியவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு. திட்டியும் பிரயோஜனமும் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?” அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சிநாம எதுவுமே சொல்லல, ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்றாரேன்னு ஆச்சரியம்.

பெரியவா! குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவளுக்கெல்லாம் கேட்குறதுக்கு முன்னாலேயே கொடுக்குற சாமி எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்றார்? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் மகான், “ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா. சிலர் தலைவலின்னு வருவா, சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். இவாள்லாம் அங்கே இருக்கறச்சே பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா, இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ, யாருக்கு சட்டுனு சிகிச்சை பண்ணலைன்னா அப்புறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்கப் போயிடுவா.

அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தவாளை டாக்டர்கள் அலட்சியப் படுத்தபடுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே, யாருக்கு எப்போ உதவணும்கிறது தெரியறதுன்னா, பகவானுக்கு யாரோட பிரச்சனையை உடனடியா தீர்க்கணும்ன்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா, உன்னை விட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார். அதுக்குள்ளே அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”

பெரியவா சொல்லச் சொல்ல, அந்த நபர் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வடிஞ்சது. அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம். மனஅழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!

Tuesday, 17 December 2019

ஸத்வம் ஸத்வவதாம் அஹம் - பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்.

நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.

“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்.

“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்.

“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்.

அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்.

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்.

“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்.

"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.

இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.

மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்.

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது.

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”
                   
( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்.

Wednesday, 11 December 2019

Remembering Mahakavi C.Subramanya Bharathi on his Birth Anniversary

Remembering Mahakavi C.Subramanya Bharathi on his Birth Anniversary. His extraordinary contribution to India's Freedom Movement and Literature will be remembered forever. #bharathiyar







Education is not, about learning facts, it is a tool, training to think.

Education is not, about learning facts, it is a tool, training to think.