Friday, 21 February 2020

மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

 
மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

(மூணு நாலு வருஷம் முன்னாடி கடைக்காரர் சொன்னதை நினைச்சுண்டு,நினைவும் வைச்சுண்டு இருந்ததும்,அவரோட பேரன் வந்ததும் ,அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டதும் இன்னொரு ஆச்சரியம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (நேற்று வந்தது
19-02-2020ல் வந்த குமுதம் பக்தி) (ஓரு பகுதி)
சந்திரமௌளீஸ்வர பூஜை முடிச்சுட்டு, யதா ஸ்தானத்துக்கு வந்து உட்கார்ந்தார் மகாபெரியவா. பக்தர்கள் வரிசையா வந்து மகானை நமஸ்காரம் பண்ணி,பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்துண்டு இருந்தா.

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.மகாபெரியவா தன்னோட பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்டார்.

மடத்து வாசல்ல செவப்புக்கலர்ல அரக்கை சட்டை போட்டுண்டு இருபது இருபத்தோரு வயசுப் பையன் ஒருத்தன் வரிசைல நிற்கறானான்னு பாரு!"

பெரியாவா வார்த்தையை முடிக்கறதுக்கு முன்னாலயே அந்தத் தொண்டர் பரபரத்தார். "இதோ பெரியவா ஒடனே போய்ப் பார்த்துக் கூட்டிண்டு வரேன்!"

சொன்ன தொண்டரை, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..!' அப்படிங்கற மாதிரி கையை அசைச்சுத் தடுத்துட்டு,"என்ன சொல்றேன்னு முழுசா கேளு...அந்தப் பையனை நன்னாப் பார்த்துக்கோ.பக்கத்துல உள்ள ஜவுளிக் கடைக்குப் போய் அந்தப் பையன் சைசுக்கு பேண்ட் சட்டை தைக்கிற அளவுக்கு நல்ல துணியா வாங்கிண்டு வா நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்துக்கிட்ட அதுக்கான பணத்தை வாங்கிண்டு போ!" சொன்னார் பெரியவா

அப்படியே வெளியில போய்ப் பார்த்த தொண்டர்,அங்கே பெரியவா சொன்ன அடையாளத்துல ஒருத்தன் தரிசன வரிசைல நின்னுண்டு இருக்கறதைப் பார்த்தார். உடனே ஸ்ரீமடத்து மேனேஜர் கிட்டே சொல்லி பணம் வாங்கிண்டுபோய்,ஜவுளி வாங்கிண்டு வந்து பெரியவா முன்னிலையில் வைத்தார்.

அதைப் பிரிச்சுக் காட்டச் சொன்ன பெரியவா,"பேஷ் நன்னாத்தான் வாங்கிண்டு வந்திருக்கே. நல்லது..நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்தைக் கூட்டிண்டு வா!" சொல்ல, அடுத்த நிமிடம் ஸ்ரீகார்யம் மகாபெரியவா முன் ஆஜரானார்.

"ஓரு ஆறாயிரத்து இருநூத்தம்பது ரூபாயை எண்ணி எடுத்து ஒரு கவர்ல போட்டுக் கொண்டுவா. அதை இந்தத் துணிமணியோட வைச்சு,ஒரு மூங்கில் தட்டுல வை. கூடவே கொஞ்சம் கனிவர்க்கமும்,புஷ்பமும் வைச்சுடு" மகானோட கட்டளை எல்லாமும் மளமளன்னு நிறைவேறித்து..

இதை அத்தனையும் செஞ்சு முடிக்கவும், வரிசை மெதுவா நகர்ந்து மகான் ஆரம்பத்துல சொன்னாரே, அந்த செவப்பு சட்டைப் பையன் பெரியவா முன்னால வந்து நிற்கவும் ரொம்ப சரியாக இருந்தது.

நமஸ்காரம் பண்ணிட்டு எழுந்திருந்த பையனைப் பார்த்தார் மகாபெரியவா. "ஊர்ல அப்பா,அம்மா எல்லாம் க்ஷேமமா இருக்காளா? இந்தா இது உனக்குத்தான்...இதுல இருக்கிற பணத்தை அம்மாகிட்டே கொடுத்துடு. ஸ்ரீமடத்துல குடுத்ததா சொல்லு.."ஆசிர்வதித்து மூங்கில்தட்டை அவன் பக்கமா நகர்த்தினார்

அந்தப் பையனுக்கு எதுவும் புரியலை.மலங்க மலங்கப் பார்த்தான். அவனுக்கு மட்டுமில்லை..அங்கே இருந்த ஸ்ரீகார்யம் உட்பட யாருக்கும் எதுவும் புரியலை. பெரியவா எதுக்காக இந்தப் பையனுக்கு இப்படி ஒரு ஆசிர்வாதம் செய்யறார்? புதுத் துணிமணியாவது பரவாயில்லை.அதுல பணமும் குறிப்பிட்ட தொகையா வைக்கச் சொன்னாரே..அது எதுக்கு? எல்லாருமே புரியாமத்தான் விழிச்சுண்டு இருந்தா.

தயங்கித் தயங்கி அந்தப் புதுத்துணி,கனிகள்,புஷ்பம் எல்லாத்தையும் எடுத்துண்ட அந்தப் பையன்,பணம் இருந்த கவரை எடுத்துக்க ரொம்பவே தயங்கினான்

"தயங்காதே எடுத்துக்கோ..இது உங்க தாத்தாவுக்கு சேரவேண்டியது...அவர் இப்ப இல்லையோன்னோ,அதான் உன்கிட்ட குடுத்து உங்க அம்மாகிட்டே தரச்சொல்றேன்!" பெரியவா சொல்ல ஆச்சரியம் இன்னும் அதிகரிச்சுது.

ஸ்ரீகார்யம் உட்பட..எல்லோரும் திருதிருன்னு விழிக்கறதைப் பார்த்துட்டு மகாபெரியவாளே சொல்லத் தொடங்கினார்.

"என்ன யாருக்கும் எதுவும் புரியலையா? ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால ஸ்ரீமடத்துக்கு எதுத்தாப்புல ஒரு பலசரக்குகடை இருந்துதே ஞாபகம் இருக்கா? அந்தக் கடைக்காரரோட பேரன்தான் இவன்.

வட தேசத்துக்கு நான் யாத்திரை புறப்பண்டு இருக்கறச்சே, அந்தக் கடைக்காரர் என்னண்டை வந்தார். நமஸ்காரம் பண்ணினார். நான் அவர்கிட்டே எப்படி இருக்கேள்? வியாபாரம் எல்லாம் நன்னா நடக்கறதா?ன்னு கேட்டேன் ...

"வியாபாரம் முன்னே நடந்த அளவுக்கு இல்லை சுவாமி..ஏதோ ஓடிண்டு இருக்கு. மடத்தில் இருந்து கூட கொஞ்சம் பணம் வரவேண்டி நிலுவை இருக்கு. நீங்க வடதேசம் போறீங்க...திரும்பவர நாலஞ்சு மாசம் ஆகும்னாங்க..அதான் உங்ககிட்டே சொல்லலாம்னு தோணித்து" அப்படின்னார் அவர்.அப்போ மடம் ரொம்ப சிரம தசையில இருந்ததால் நானும் எதுவும் சொல்ல முடியலை. எவ்வளவு பாக்கின்னு மட்டும் கேட்டேன்.எண்ணூத்தி சொச்சம்னு சொன்னார்

வட தேசத்துல இருந்து திரும்பி வந்தப்போ, இங்கே கடையையே காணும். விசாரிச்சதுல கடைக்காரர் காலகதி அடைஞ்சுட்டதாகவும், அவரோட சொந்தக்காரா எல்லாரும் ஊரை மாத்திண்டு போயிட்டதாகவும் தெரிஞ்சுது..

கடைக்காரர் கடன் இருக்குன்னு சொன்னாரே, அதை எப்படி யார் மூலமா தர்றது? யார்கிட்டே தர்றதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். இவ்வளவு நாள் கழிச்சு இப்போதான் இவன் மூலமா அதை திருப்பி செலுத்தறதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு!. அவன் கடைக்காரரோட பொண்ணு வயத்துப் பேரன்"

மகாபெரியவா சொல்லிட்டு நிறுத்த அந்தப் பையனுக்கு ரொம்பவே ஆச்சரியம்! தான் எதுவுமே சொல்லாம, தன்னோட தாத்தாவை எப்படித் தெரிஞ்சுண்டார் பெரியவா? அந்த ஆச்சரியம் தீராமலே பெரியவாளை இன்னொரு தரம் நமஸ்காரம் செஞ்சுட்டு புறாப்பட்டான் அவன்.

மூணு நாலு வருஷம் முன்னால கடைக்காரர் சொன்னதை நினைவுல வைச்சுண்டு இருந்தது, அவரோட உறவுக்காரன் வந்ததும் அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டது, கடைக்காரர் சொன்ன தொகைக்கு சரியான சதவீதத்துல வட்டி குடுத்து! இத்தனை நாள்ல வட்டியும் அசலுமா என்ன தொகை வருமோ அதை ரொம்பத் துல்லியமா கணக்குப் போட்டு, அந்தத் தொகையை கவர்ல வைச்சுத் தரச் சொன்னது,

இதெல்லாம் மகாபெரியவா சாட்சாத் அந்த மகேஸ்வரனோட ..அம்சம்கறதை சொல்லாமலே உணர்த்தக்கூடிய அற்புதங்கள் இல்லாம வேற என்ன?

No comments:

Post a Comment