Monday, 24 February 2020

"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா


"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா

.( மந்திராலய பக்தருக்கு அருளிய சம்பவம்)(இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ? பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!)

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம்.புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில்நி லையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார். மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். 'குண்டக்கல்!'
"அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?..."
அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும்அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள்.. அவர்களைத் தரிசிப்பதற்காகத்தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
"தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்" என்றார் மந்திராலயம்.
"கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத்தான் இறங்கியிருக்கிறீர்கள்...வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்" என்றார் ஜோஷி.
பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள். வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும்,"இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?" என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.
மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது.
"நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போகமுடியாமல் போயிடுத்து...."
பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள்.
அவ்வப்போது மந்திராலய பக்தர், "ஆமாம்...ஆமாம்..." என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம். "அப்படித் தானே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"ஆமாம்.." என்று குற்ற உணர்வுடன் பதில்.
"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் ..பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா
பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.
"கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால்தான், அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா" என்றார் ஜோஷி.
உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?
இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?
பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!

No comments:

Post a Comment