Wednesday, 12 February 2020

வடநாட்டு மார்வாடி ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்தார்,



"வடநாட்டு மார்வாடி ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்தார், மகாபெரியவரைப் பற்றி அவருக்குப் பெரிதாக எந்த விவரமும் தெரியாது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களைத் தரிசிக்கவும், காமாட்சிக்குத் தன் வேண்டுதலாகக் குறிப்பிட்ட தங்கத்தை செலுத்தவும்தான் வந்திருந்தார், அந்த மார்வாடி.
வந்த இடத்தில் காமாட்சி கோயிலுக்குப் போகும் சமயத்தில் கொஞ்சம் நேரமாகிவிடவே நடை சாத்திவிட்டதால், அங்கே இருந்த ஒருவர் சொன்னதை வைத்து, ஸ்ரீமடத்துக்கு மகாபெரியவரை தரிசிக்க வந்திருந்தார்.
கோயில் நடை திறக்கும்வரை எங்கேயோ சென்று நேரத்தை வீணாகக் கழிப்பதைவிட, மகானை தரிசித்தால் புண்ணியம், நேரமும் வீணாகாது என்ற எண்ணம் அவருக்கு. ஸ்ரீமடத்துக்கு அவர் வந்த சமயத்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. மெதுவாக நகர்ந்த வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த மார்வாடி, தன் முறை வந்ததும் மகாபெரியவா முன் விழுந்து நமஸ்கரித்தார்.
"சுவாமி, நான் இதற்கு முன்னால உங்களைப்பத்தி கேள்விப்பட்டதுகூட இல்லை. கோயில் தரிசனத்துக்குத்தான் வந்தேன். ஆனா,இங்கே வந்து உங்களை தரிசனம் செஞ்சதும், என் மனசுக்குள்ளே ஒரு பரவசம் நிறைஞ்சிருக்கு. உங்களுக்கு ஏதாவது கைங்கரியம் செய்யணும்னு எனக்கு தோணுது!" சிலிர்ப்பாகச் சொன்னார்.
கரம் உயர்த்தி அவரை ஆசிர்வதித்த மகான், "கொஞ்ச நேரம் மடத்திலேயே இரு...நீ செய்ய வேண்டியத்தைச் சொல்கிறேன்!" என்றார்.
ஸ்ரீமடத்தில் ஓரிடத்தில் சென்று அமர்ந்தது, அந்த மார்வாடி குடும்பம். ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்தது. பொறுமையாக இருந்த அவர்கள், நேரம் வேகமாக நகர நகர, காமாட்சி கோயிலில் நடை திறந்துவிடுவார்கள், சரியான நேரத்துக்குப் போனால் அம்மனை தரிசித்துவிட்டு, மேலும் சில கோயில்களையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம்...மகான் இன்னும் எதுவும் சொல்லவில்லையே என்று மனதிற்குள் எண்ணம் அலைமோத தவிப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
அந்த சமயத்தில் தன் மகளோடு வந்து மகானைப் பணிந்து கொண்டிருந்தார் ஓர் ஏழை.
"பெரியவா..இவள் என்னோட சீமந்த புத்திரி (மூத்த மகள்). அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப்படற சூழல். இந்த நிலைமைல, இவளுக்கு வயசு ஆகிண்டே போறதால, கல்யாணம் பண்ணவேண்டிய சுமையும் சேர்ந்துடுச்சு. சொந்தத்துலேயே ஒரு வரன் இருக்கு. ஆனா, காலணா காசுகூட கையிலே இல்லாததால போய்க் கேட்கறதுக்குக் கூட தயக்கமா இருக்கு. நீங்கதான் இவளுக்குத் திருமணம் கைகூட அனுகிரஹம் செய்யணும்...!" தழுதழுப்பாகச் சொன்னார், அந்த ஏழை.
கரம் உயர்த்தி ஆசிர்வதித்த மகான், "கொஞ்சம் இரு...!" என்று அவரிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த மார்வாடியை விரல் சொடுக்கி கூப்பிட்டார்.
பவ்யமாக வந்த அவரிடம் "காமாட்சி கோயில்ல தரிசனம் பண்ணிட்டு, உண்டியல்ல செலுத்தணும்னு பதின்மூன்று பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாயே, அதை இவரிடம் கொடு...நீ நேரடியாக அந்தக் காமாட்சியிடமே சேர்ப்பித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்!" சொன்னார், மகான்.
அதைக் கேட்டதும் அப்படியே அதிர்ந்துபோனார், அந்த வடநாட்டுக்காரர். "கோயில் உண்டியலில் போடுவதற்காக தான் நகையைக் கொண்டுவந்த விஷயத்தை, அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லவில்லை....ஒரு பவுன் அரைப்பவுன் என்று சின்னச் சின்ன நகைகளாகச் சேர்த்து, மொத்தமாக பதின்மூன்று பவுனை ஒரு முடிச்சாகக் கட்டி பெட்டியில் பத்திரமாக வைத்து எடுத்து வந்திருந்தார். அது எப்படி இந்த மகானுக்குத் தெரிந்தது? காமாட்சி கோயிலில் அதைச் செலுத்த தீர்மானித்தது, இங்கே உட்கார்ந்திருந்த நேரத்தில்தான். அதையும் அல்லவா இவர் சொல்கிறார்?" மனதுக்குள் கேள்விகள் எழ ஆச்சரியத்தோடு அமைதியாக நின்றவரிடம் மகானே மறுபடியும் பேசினார்.
"என்ன, காமாட்சிக்குக் கொண்டுவந்ததை இந்தப் பொண்ணுக்கு எப்படித் தர்றதுன்னு யோசிக்கிறியா?" கேட்டவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார், "உன்னோட பேர் என்னன்னு எல்லோருக்கும் கேட்கறாப்புல சொல்லு!" சொன்னார்.
"காமாட்சி!" அவள் சொன்னது அங்கே எதிரொலித்தது.
மார்வாடி மட்டுமல்ல, அங்கே இருந்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள் இப்போது. காரணம், அங்கே வந்தது முதல் அந்தப் பெண்ணோ அவளது தந்தையோ அவள் பெயரைச் சொல்லவேயில்லை. அப்படியிருக்க, அவள் பெயரை எப்படி தெரிந்து கொண்டார் மகான்?
அப்புறம் என்ன, கோயில் உண்டியலில் செலுத்த கொண்டுவந்த நகைகளை, அப்படியே முடிச்சாக எடுத்து, மகான் முன்னிலையிலேயே மிகுந்த சந்தோஷத்தோடு அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்தார், மார்வாடி.
வடநாட்டு மார்வாடிக்குப் புண்ணியமும், ஏழைப் பெண் திருமணத்துக்குப் பொருளும் கிடைக்க அனுகிரஹம் செய்த மகானின் தீர்க்கதரிசனத்தை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

No comments:

Post a Comment