Friday 14 February 2020

"ஆசி ஒன்றே போதுமே" (பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)


"ஆசி ஒன்றே போதுமே"
(பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)
(திரு வி.ஜி.பன்னீர்தாஸ்க்கு நடந்த அதிர்ச்சியும் புகழாரமும்)
சொன்னவர்-எஸ்.பாண்டுரங்கன் காஞ்சிபுரம்
(நிர்வாக அறங்காவலர்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நான் 1972-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தேன். அந்த ஆண்டு திரு.வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்கள்,வேலூரில் அவர் நடத்தும் தவணை முறைக் கிளையைத் திறப்பதற்காகச் சென்று இருந்தார்.காஞ்சிபுரம் மஹா பெரியவாளை தரிசித்து, அவருடைய ஆசி பெறவேண்டும்,என்று என்னுடைய வேலூர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரத்தில் உள்ள என் இல்லத்துக்கு வந்தார்கள்.வந்தவுடன் ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அப்போது காஞ்சி சங்கர மடத்துக்கு ஸ்ரீகார்யமாக இருந்த திரு.ஜானகிராமையா அவர்களிடம் phone மூலம் தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். "பெரியவா அவர்கள் தேனம்பாக்கத்தில் உள்ளார். நீ அவர்களை அழைத்துக்கொண்டு போய் வா" என்று சொன்னார்.
அன்றைய தினம் ஸ்ரீ மஹா பெரியவா மௌனம்.பாரத நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மாண்புமிகு ஸ்ரீ வி.வி.கிரி.அவர்கள்,அன்றைய தினம் காலை சுமார் பத்து மணி அளவில் ஸ்ரீ மஹா பெரியவாளைத் தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றுவிட்டார்
நாங்கள் அன்று மாலை ஐந்து மணி அளவில் தேனம்பாக்கம் சென்று ஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.தேனம்பாக்கத்திற்கு திரு.வி.ஜி.பி,அவர் மனைவி,ஒரு புகைப்படக்காரர், திரு கிருஷ்ணமூர்த்தி,நான் ஆகிய ஐவர் சென்றோம்.
திரு பன்னீர்தாஸ் அவர்கள், போட்டோ படம் எடுப்பவரிடம்,"௳ஹா பெரியவா அவர்கள் என்னை ஆசிர்வாதம் செய்யும் சமயம் நன்றாகப் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்" என்று சொன்னார் நான் குறிக்கிட்டு,"எதற்கும் அவர்களிடம் உத்திரவு பெற்றால் நலமாக இருக்கும்" என்று சொன்னேன். அதற்கு திரு வி.ஜி.பி. அவர்கள்,"பெரியவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள்.நாம்தான் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்.
நாங்கள் வந்த விவரம் பெரியவாளிடம் சொல்லப்பட்டது.வரச்சொல் என்று அனுமதி கொடுத்துவிட்டு,மஹாபெரியவா எங்களுடன் பேச ஆரம்பித்துவிட்டார் அவர் குடிலுக்கு உள்ளே இருந்தார். நாங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டோம்.
ஸ்ரீ மஹாபெரியவா,திரு வி.ஜி.பி யைப் பார்த்து "எதற்கு வந்தீர்கள்!" என்று கேட்டார்கள்.
"நான் பத்தாயிரம் வீடுகள் கட்டி,தவணை முறையில் கொடுக்க ஒரு ஸ்கீம் போட்டுள்ளேன்,அதற்கு ஸ்ரீ மஹாபெரியவாளுடைய ஆசீர்வாதம் வேண்டும்.நான் ரோம் நாட்டிற்குச் சென்று, போப் ஆண்டவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றேன்.இன்னும் பல மகான்களை தரிசித்து ஆசி பெற்றேன். அது போன்று தங்களுடைய ஆசிர்வாதமும் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளேன்.."
ஸ்ரீ மஹா பெரியவா; இதற்கு எவ்வளவு பணம் தேவை?
வி.ஜி.பி.; 42 கோடி ஆகும் என்று உத்தேச மதிப்பு.
ஸ்ரீ மஹா பெரியவா; இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது.
வி.ஜி.பி. ' நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தேன். சில ஆண்டுகள் கழித்து தவணை முறைத் திட்டம் ஒன்று ஆரம்பித்தேன். அது வளர்ந்து,இப்பொழுது பல கிளைகள் உருவாகி உள்ளன.எல்லாம் மக்கள் பணம்தான். இதைப் போன்றுதான் வீடுகள் திட்டமும் செயல்படுத்தலாமென உத்தேசித்துள்ளேன். தவணை முறைத் திட்டம் ஆனபடியால் பணம் ரோலிங் ஆவதற்கு எங்களுக்கு சௌகரியமாக உள்ளது. இதற்கு அதிக முதலீடு தேவை இல்லை.நம்பிக்கை,நாணயம்,மரியாதை இதுதான் எங்கள் முதலீடு
ஸ்ரீ மஹா பெரியவா ; நல்ல திட்டம்தான். வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு உதவியாகவும்,நேர்மையாகவும்,பயன் உள்ளதாகவும் ஏழைகளுக்கு சேவை செய்யுங்கள்.
இதற்குள் எங்களுடன் வந்த கேமராமேன் 20 படங்களை எடுத்து இருப்பார்.ஸ்ரீ மகாபெரியவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தான ஆயிரம் கால் மண்டபம் அருகில் சென்றோம். ஆயிரங்கால் மண்டபம் பழுதடைந்த நிலையில் கல்தூண்கள் எதிரே விழுந்து இருந்தன.அந்த கல்தூண்களை திரு வி.ஜி.பி. பார்த்து, "என்ன சார்? விலை மதிப்பே இல்லாத அளவு கல்தூண்கள் இப்படி சிதறிக் கிடக்கிறது? அவ்வளவும் Black Gold சார்!" என்று சொன்னார். அந்த சமயம் அவர் சென்னை கடற்கரை ஓரம் Golden Beach கட்டிக் கொண்டு இருந்தார்.
பிறகு அவர்,"என் வாழ்நாளில் இன்று மிகவும் சந்தோஷமான நாள். மறக்கமுடியாத இனிய நாள்! மஹா பெரியவாள் அவர்கள் எவ்வளவு எளிமையாக உள்ளார்!" என்று மனமாரப் புகழ்ந்து என்னிடம் சொன்னார். "நான் போய் நாலு நாட்களில் இன்று எடுத்த போட்டோ பிரதிகளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்
அவர் சென்னை போன ஐந்தாம் நாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் , "கண்கண்ட தெய்வம் என்றால் காஞ்சி சங்கராசாரியார்தான் விலை உயர்ந்த கேமராவினால் அன்றைய தினம் எடுக்கப்பட்ட போட்டோ படம் ஒன்று கூட பதிவாகவில்லை! எல்லா பிரதிகளும் கறுப்பாக உள்ளது நீங்கள் அன்று உத்திரவு பெற வேண்டுமென்று சொன்ன வார்த்தையை நான் உதாசீனம் செய்தேன்,ஆனால், அவருடைய ஆசி ஒன்றே எனக்குப் போதும்" என்று கடிதத்தில் எழுதி இருந்தது..

No comments:

Post a Comment