Monday, 16 March 2020

*"பசி தீர்த்த பரமாசார்யா"*


*"பசி தீர்த்த பரமாசார்யா"*

திராவிட இயக்கத் தொடர்போடு கொண்டபுலவர் ஏ.கே. வேலனுக்கு அருள். ( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் )
ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.
உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.
நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!
ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!
அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராமணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால், அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.
‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற, இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க, இந்த பிராமணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான். அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் மடத்துக்கு அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின் அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா, பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம் சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர் காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.
புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும் எதிர்பாக்கவில்லை – அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை. புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு புன்னகைதான் பதில்.
சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார் பெரியவர்.
படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!
புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு!
புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.
இந்தப் புலவர் யாரோ அல்ல. அந்த நாளில் புகழ்பெற்று விளங்கிய *ஏ.கே. வேலன்* என்பவர்தான் இவர். திராவிட இயக்கத் தொடர்போடு ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர்.
இவரிடம் பெரியவர் எந்த உபன்யாசமும் செய்யவில்லை. அவர் போன வழியையும் தவறென்றோ சரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு அது பக்தியாய் மாறிவிட்டது.
*உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்.*

Thursday, 5 March 2020

“போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”



போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”

ஒருமுறை_பெரியவா ஆந்த்ராவில்_முகாம்
அந்த ஸமயம், ஶ்ரீ சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை மற்றும் மடத்துப் பொறுப்பிலிருந்து, பெரியவா…. முழுவதுமாக விலகிக் கொண்டு விட்டார். எனவே, பாத யாத்ரையாகப் போகும்போது, தன்னுடன் ஒரு சின்ன காமாக்ஷி அம்மன் விக்ரஹத்தை வைத்துக் கொண்டு, அவளுக்கு பூஜை பண்ணுவார்.

அதேபோல் ஒருநாள்… தன்னுடைய காமாக்ஷிக்கு பூஜை பண்ண ஆரம்பித்தார்.
பூஜையை ஆரம்பித்ததும், சொல்லி வைத்தாற்போல், ஸரியாக அந்த நேரத்தில், எங்கிருந்தோ ஒரு பெண் வந்தாள்!
பார்த்தாலே மஹா ஏழை என்று தெரிந்தது! உடலைச் சுற்றி…ஒரு பழைய கந்தல் புடவை, அதுவும் இடது முழங்காலுக்கு மேலே கொஞ்சம் பெருஸாகவே கிழிந்திருந்தது.
வந்தவளோ….. “எனக்கு பொடவை குடு.!. பொடவை குடு…!” என்று ஏகமாக ஶப்தம் போட்டு, கூவி ரகளை செய்தாள்.
“பூஜை ஸமயத்ல வந்து…. இப்டிக் கத்தி ஊரைக் கூட்றாளே!”
“இந்தாம்மா! இப்டில்லாம் கத்தக்கூடாது!…….. போய்ட்டு அப்றமா வா! ”
அவள் ஏதோ…. ஸாப்பாட்டுக்கு பறக்கிறாள் என்று எண்ணி, ஶிஷ்யர்கள் அவளை விரட்ட ஆரம்பித்தனர்.
“எனக்கு பொடவை குடு……. பொடவை!…”
ஶிஷ்யர்களை அவள் லக்ஷ்யமே செய்யவில்லை! பெரியவாளையே பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள்.
பூஜை பண்ணிக் கொண்டிருந்த பெரியவா, அமைதியாக கொஞ்ச நேரம் அவளை பார்த்தார்.
ஶிஷ்யரை அழைத்தார்….
“போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”
ஶிஷ்யர் கொண்டு வந்ததும், அதை ஒரு தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார்.
பழத்தையோ.. வேறு எதையுமே தொடாமல், புடவையை மட்டும் எடுத்துக் கொண்ட அந்தப் பெண், படுவேகமாக போய் விட்டாள்.
இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஶிஷ்யருக்கு மனஸில் ஏதோ பொறிதட்ட, யாரிடமும் சொல்லாமல், விடுவிடுவென்று அவள் பின்னாலேயே வேகமாக போனார்.
அமானுஷ்ய வேகத்தில் அவள் என்னமோ…. நடப்பது போலிருந்தாலும், இவரோ வேகமாக ஓடினார்.
நிறைய மரங்களடர்ந்த வனப்ரதேஸம் போல் வந்ததும், முன்னால் போனவளை திடீரென்று காணவில்லை!
இவர் சுத்தி சுத்தி தேடும் போது, அவருடைய கன்னத்தில் “பளீர் பளீர்” ரென்று யாரோ அறைந்தது போலிருந்தது.
அங்கேயே மயங்கி விழுந்தவர் கொஞ்ச நேரம் கழித்து, எழுந்து தட்டிவிட்டுக் கொண்டு, எப்படியோ பெரியவாளிடம் வந்து சேர்ந்தார்.
உள்ளே நுழைந்தவரைப் பார்த்த பெரியவா சிரித்துக் கொண்டே 'அடி-நலன்' விஜாரித்தார்.....
“என்னடா? பொடவை என்னாச்சுன்னு பாக்க போனியோ? நன்னா…. பளீர்னு…. வாங்கினியா? ”
குரலில் கிண்டல்……
பேந்தப் பேந்த முழித்தார் ஶிஷ்யர்.
"வந்தவ……….. ஸாக்ஷாத் அம்பாள்டா!… மடையா!”
“என்னது?….”
தன் முன்னே வைத்திருந்த தன்னுடைய அம்பாள் விக்ரஹத்தை காட்டினார்.
“பாரு! வந்தவளோட பொடவை எங்கெல்லாம் கிழிஞ்சிருந்ததோ, அதே மாதிரி… இந்த அம்பாளுக்கும் பொடவை-ல கிழிஞ்சிருக்கு பாரு!”
தனக்கு தேவையானதை பெரியவாளிடமே நேரிலேயே வந்து, மிரட்டி உருட்டியாவது, ஸ்வாதீனமாக கேட்டு பெறுவதை அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Wednesday, 4 March 2020

மடத்து வாசலில் பயில்வான் தோற்றத்துடன் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்

 
மடத்து வாசலில் பயில்வான் தோற்றத்துடன் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்
(பயந்து ஓடிய ஒரிஜனல் பயில்வான்)
(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அது தான் புதிர்!)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(முன்பே இந்த பதிவை போட்டு இருக்கேன் அது தினமலர் - இது பாலு)

காஞ்சீபுரத்துக்கு ஒரு பயில்வான் வந்தான்.அவனுடைய உடல்பலம் அளவிட முடியாதது என்று சொன்னார்கள். ஒரு பிடி எள்ளைக் கொடுத்தால் எண்ணெயாகப் பிழிந்து தருவான்.சிலம்பாட்டம் குத்துச் சண்டைகளில் பல பேர்களுடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறான். அதனால் ஒரு கூட்டம் அவனை மொய்த்துக் கொண்டிருந்தது

பெரியவாளிடம் தன் வீரத்தைக் காட்டி சன்மானம் பெற வேண்டும் என்ற நோக்கம் அவனுக்கு. பெரியவா முன்னிலையில் தன் சாகசங்களைக் காட்டவும் தயாராக இருந்தான் அதாவது, 'இவனுடன் குஸ்தி போடு' என்று பெரியவா,ஒரு நபரைக் காட்டினால்,அவருடன் மல்யுத்தம் செய்வதற்கும் சித்தமாயிருந்தான்

ஸ்ரீ மடத்துக்கு அவ்வப்போது வந்து கைங்கர்யம் செய்யும் இளவயது வைதிகர் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள், பருமனான உடற்கட்டு உடையவர்

பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளைக் கூப்பிட்டார்கள்.

"கிருஷ்ணா, நீ போய் மடத்து வாசல்லே நில்லு. ஒரு மணி நேரம் இந்தண்டை - அந்தண்டை போகக் கூடாது,என்ன?" - பெரியவா

"உத்தரவு..." - கிருஷ்ண சாஸ்திரிகள்.

கிருஷ்ண சாஸ்திரிகள் உட்பட, யாருக்குமே இந்த விசித்திரமான உத்திரவின் உட்கருத்து விளங்கவில்லை. என்றாலும், பெரியவா உத்திரவுப்படி கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ மடம் வாசலில் நிலையாக நின்று கொண்டார். ஒரு மணி நேரம் கழித்துத் தான் உள்ளே வந்தார்.பின்னர் பெரியவா பூஜையை முடித்துக்கொண்டு வந்ததும் உத்திரவு பெற்றுக் கொண்டு மணக்காலுக்குப் புறப்பட்டார்.

காஞ்சீபுரத்துக்கு வந்த பயில்வானுக்கு நெருக்கமான உள்ளூர்க்காரர் ஒருவர், அன்றிரவு தரிசனத்துக்கு வந்தார். அவர், அணுக்கத் தொண்டர்களிடம், " மடத்தில் வைதிகர்கள், கைங்கர்யர்கள் இருப்பார்கள்.பயில்வான்களைக் கூட , நியமித்திருக்கிறார்களா?" என்று தொண்டர்களிடமே கேட்டார்.

"கேள்வியே விநோதமாக இருக்கோ? மடத்தில் பயில்வான்களை வைத்துக்கொண்டா ரக்ஷிக்க வேண்டும்?"

......இந்த ஊருக்கு வந்த பிரபலமான ஒரு பயில்வான், காலை சுமார் பத்து மணிக்கு மடத்துக்கு வந்தார்.வாசலில் பலசாலியான ஒரு பயில்வான் நிற்பதைப் பார்த்துவிட்டு,
பயந்துகொண்டு உள்ளே வந்து தரிசனம் செய்யாமலே திரும்பிவிட்டார. அவரை சென்னைக்கு அனுப்பி விட்டுத் தான், நான் இங்கே வந்திருக்கிறேன்....."

சிஷ்யர்கள் 'ஓ'வென்று அட்டகாசமாகச் சிரித்தார்கள்."மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகளை வாசலில் நிற்கச் சொன்னார்கள்,பெரியவா. அதன் காரணம் இப்போ தான் புரியறது.. .அவரைப் பார்த்துத் தான் பயில்வான் பயந்திருக்கிறான்!..."

ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

அது தான் புதிர்!.

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"


"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"
(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில்.)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.
இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?
பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
"என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்."
பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல் வந்து நின்றது .
"வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு."
"சரி..."
"காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு - உன் அப்பா,தாத்தா ,கொள்ளுத் தாத்தா மாதிரி - கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு..."
கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!
"அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட மகாபிரபுவே!. ..இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.
பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்
அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால், "கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?" என்று நினைவாகக் கேட்பார்கள்.
வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; "அவர் செத்துப் போய்விட்டார்" என்றார்,இரக்கம் தோன்ற.
பெரியவா பட்டென்று, "அவன் செத்துப் போகல்லே... சிவலோகம் போயிருக்கான்" என்றார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.
பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, "நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார்கள்.

Monday, 2 March 2020

"சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" பெரியவாளிடம் ஒரு சாமான்யன்


"சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" பெரியவாளிடம் ஒரு சாமான்யன்

ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" -(தொடர்ந்து நிர்ஜல உபவாசம் அனுஷ்டித்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி குமுதம் பக்தி

ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.
ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர். அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.
அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி,
"சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" அப்படின்னு சொன்னான்.
அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா.
"ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான் . சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" அப்படின்னு சொல்லிட்டு அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால் குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.
அதுவும் எப்படித் தெரியுமா?
ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம்.மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம். அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.
ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.
ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிக்கறதைப் பார்த்துட்டு "இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவஸ்யமா?" அப்படின்னு கேட்டார் சீடர் ஒருத்தர்.
அதற்கு பரமாசார்யா என்ன சொன்னார் தெரியுமா?
"இத்தனை ஆசாரத்தை அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே" அப்படின்னுதான்.
லோகத்துக்கெல்லாம் படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்கமுடியாம அன்னபூரணிகிட்டே பிட்சை எடுத்ததா புராணம் சொல்றது. ஆனா, பரமாசார்யா, அந்த அன்னபூரணி தானாவே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம்னுட்டு உபவாசம் இருக்கிறதுக்கு ஆசைப்பட்டார்ங்கறச்சே அவரோட பெருமையை என்னன்னு சொல்றது?

Friday, 28 February 2020

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)


(பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட் - எல்லா நோய்களுக்கும், "நோய் நாடி,நோய் முதல் நாடி" நோயாளிகளின் உள்ளமும் நாடி, அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்)
.சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்

தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா


தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.


பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்.... பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?
பெரியவாள் சொன்னார்கள்.
1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடையதுதானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை.
2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.
4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்
கொள்வதில்லை.
-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு
என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ? குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி, ஏழைகளுக்குஉதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும். அப்புறம்... வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் "நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்

Wednesday, 26 February 2020

‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.



பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….
மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.
கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.
கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.
பெரியவர் கைமாறினார்.
பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.
உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.
தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.
தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.
பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?
ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.
தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.
இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.
இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.
சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.
காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.
கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.
இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.
ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.
ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.
“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.
அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.
அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.
தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது
காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.
காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?
அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா.
அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.
மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.
பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.
விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.
‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.
உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.
பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.
‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.
இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.
நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.
இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.
அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.
முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.
அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.
ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.
சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?