Friday 28 February 2020

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)


(பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட் - எல்லா நோய்களுக்கும், "நோய் நாடி,நோய் முதல் நாடி" நோயாளிகளின் உள்ளமும் நாடி, அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்)
.சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்

தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா


தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.


பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்.... பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?
பெரியவாள் சொன்னார்கள்.
1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடையதுதானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை.
2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.
4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்
கொள்வதில்லை.
-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு
என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ? குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி, ஏழைகளுக்குஉதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும். அப்புறம்... வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் "நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்

Wednesday 26 February 2020

‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.



பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….
மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.
கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.
கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.
பெரியவர் கைமாறினார்.
பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.
உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.
தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.
தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.
பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?
ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.
தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.
இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.
இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.
சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.
காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.
கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.
இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.
ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.
ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.
“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.
அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.
அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.
தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது
காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.
காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?
அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா.
அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.
மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.
பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.
விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.
‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.
உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.
பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.
‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.
இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.
நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.
இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.
அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.
முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.
அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.
ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.
சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?

Tuesday 25 February 2020

நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"


நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"

(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)
.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது - 'அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..
ஒரே ஒருதடவை..."

வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே
போயிற்று.

வாசற்படியிலே, காலடிச் சத்தம் கேட்டாலே, 'அவன் தானோ?' என்ற திகில். 'போகவேண்டியிருக்கிறதே?'
என்ற அச்சம் இல்லை; 'தரிசிக்காமல் போகிறோமே!' என்ற ஏக்கம்.

ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.
ஆமாம், காலடிச் சத்தம்.
"உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்திரவு..." என்றார் வந்தவர்.
வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது.
'நான் எனக்குள்தானே பேசிக்கொண்டேன்? அதெப்படி பெரிவாளுக்குக் கேட்டிருக்கும்.?'
'நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவனா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்து விடவில்லை.'
மடத்துப் பணியாளர், " என் தோளைப் புடிச்சிண்டு நடந்துவந்து கார்லே ஏறிக்கிறேளா?" என்றார்.
"கார்! 'விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!'
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவா அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.
"அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?" என்றார் சிப்பந்தி.
"முதல்லே, பெரியவா தரிசனம்....அப்புறமா..."
பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக்கொண்டன. ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.
பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து,அந்தச் சரீரத்தின்மேல் போர்த்தச் சொன்னார்கள்.
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளை செய்யும்படி உத்திரவாயிற்று.
"முதல்லே, பெரியவா தரிசனம்; அப்புறமா..."
அப்புறமா அம்பாளை தரிசித்துக் கொள்ளலாம்- என்று சொல்லத்தானே விரும்பினார்.
அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.
அரைமணி கழித்து, அவர் 'விமான'த்தில் பயணித்துக் கொண்டிருந்தார் - அம்பாளை தரிசிக்க.
இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது!
'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.'
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை

Today is the only one day in all the days that will ever be. But what will happen in all the other days that ever come can depend on, what you do today.

Today is the only one day in all the days that will ever be.  But what will happen in all the other days that ever come can depend on, what you do today.


Monday 24 February 2020

"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா


"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா

.( மந்திராலய பக்தருக்கு அருளிய சம்பவம்)(இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ? பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!)

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம்.புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில்நி லையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார். மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். 'குண்டக்கல்!'
"அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?..."
அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும்அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள்.. அவர்களைத் தரிசிப்பதற்காகத்தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
"தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்" என்றார் மந்திராலயம்.
"கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத்தான் இறங்கியிருக்கிறீர்கள்...வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்" என்றார் ஜோஷி.
பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள். வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும்,"இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?" என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.
மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது.
"நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போகமுடியாமல் போயிடுத்து...."
பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள்.
அவ்வப்போது மந்திராலய பக்தர், "ஆமாம்...ஆமாம்..." என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம். "அப்படித் தானே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"ஆமாம்.." என்று குற்ற உணர்வுடன் பதில்.
"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் ..பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா
பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.
"கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால்தான், அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா" என்றார் ஜோஷி.
உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?
இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?
பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!

Friday 21 February 2020

மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

 
மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

(மூணு நாலு வருஷம் முன்னாடி கடைக்காரர் சொன்னதை நினைச்சுண்டு,நினைவும் வைச்சுண்டு இருந்ததும்,அவரோட பேரன் வந்ததும் ,அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டதும் இன்னொரு ஆச்சரியம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (நேற்று வந்தது
19-02-2020ல் வந்த குமுதம் பக்தி) (ஓரு பகுதி)
சந்திரமௌளீஸ்வர பூஜை முடிச்சுட்டு, யதா ஸ்தானத்துக்கு வந்து உட்கார்ந்தார் மகாபெரியவா. பக்தர்கள் வரிசையா வந்து மகானை நமஸ்காரம் பண்ணி,பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்துண்டு இருந்தா.

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.மகாபெரியவா தன்னோட பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்டார்.

மடத்து வாசல்ல செவப்புக்கலர்ல அரக்கை சட்டை போட்டுண்டு இருபது இருபத்தோரு வயசுப் பையன் ஒருத்தன் வரிசைல நிற்கறானான்னு பாரு!"

பெரியாவா வார்த்தையை முடிக்கறதுக்கு முன்னாலயே அந்தத் தொண்டர் பரபரத்தார். "இதோ பெரியவா ஒடனே போய்ப் பார்த்துக் கூட்டிண்டு வரேன்!"

சொன்ன தொண்டரை, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..!' அப்படிங்கற மாதிரி கையை அசைச்சுத் தடுத்துட்டு,"என்ன சொல்றேன்னு முழுசா கேளு...அந்தப் பையனை நன்னாப் பார்த்துக்கோ.பக்கத்துல உள்ள ஜவுளிக் கடைக்குப் போய் அந்தப் பையன் சைசுக்கு பேண்ட் சட்டை தைக்கிற அளவுக்கு நல்ல துணியா வாங்கிண்டு வா நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்துக்கிட்ட அதுக்கான பணத்தை வாங்கிண்டு போ!" சொன்னார் பெரியவா

அப்படியே வெளியில போய்ப் பார்த்த தொண்டர்,அங்கே பெரியவா சொன்ன அடையாளத்துல ஒருத்தன் தரிசன வரிசைல நின்னுண்டு இருக்கறதைப் பார்த்தார். உடனே ஸ்ரீமடத்து மேனேஜர் கிட்டே சொல்லி பணம் வாங்கிண்டுபோய்,ஜவுளி வாங்கிண்டு வந்து பெரியவா முன்னிலையில் வைத்தார்.

அதைப் பிரிச்சுக் காட்டச் சொன்ன பெரியவா,"பேஷ் நன்னாத்தான் வாங்கிண்டு வந்திருக்கே. நல்லது..நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்தைக் கூட்டிண்டு வா!" சொல்ல, அடுத்த நிமிடம் ஸ்ரீகார்யம் மகாபெரியவா முன் ஆஜரானார்.

"ஓரு ஆறாயிரத்து இருநூத்தம்பது ரூபாயை எண்ணி எடுத்து ஒரு கவர்ல போட்டுக் கொண்டுவா. அதை இந்தத் துணிமணியோட வைச்சு,ஒரு மூங்கில் தட்டுல வை. கூடவே கொஞ்சம் கனிவர்க்கமும்,புஷ்பமும் வைச்சுடு" மகானோட கட்டளை எல்லாமும் மளமளன்னு நிறைவேறித்து..

இதை அத்தனையும் செஞ்சு முடிக்கவும், வரிசை மெதுவா நகர்ந்து மகான் ஆரம்பத்துல சொன்னாரே, அந்த செவப்பு சட்டைப் பையன் பெரியவா முன்னால வந்து நிற்கவும் ரொம்ப சரியாக இருந்தது.

நமஸ்காரம் பண்ணிட்டு எழுந்திருந்த பையனைப் பார்த்தார் மகாபெரியவா. "ஊர்ல அப்பா,அம்மா எல்லாம் க்ஷேமமா இருக்காளா? இந்தா இது உனக்குத்தான்...இதுல இருக்கிற பணத்தை அம்மாகிட்டே கொடுத்துடு. ஸ்ரீமடத்துல குடுத்ததா சொல்லு.."ஆசிர்வதித்து மூங்கில்தட்டை அவன் பக்கமா நகர்த்தினார்

அந்தப் பையனுக்கு எதுவும் புரியலை.மலங்க மலங்கப் பார்த்தான். அவனுக்கு மட்டுமில்லை..அங்கே இருந்த ஸ்ரீகார்யம் உட்பட யாருக்கும் எதுவும் புரியலை. பெரியவா எதுக்காக இந்தப் பையனுக்கு இப்படி ஒரு ஆசிர்வாதம் செய்யறார்? புதுத் துணிமணியாவது பரவாயில்லை.அதுல பணமும் குறிப்பிட்ட தொகையா வைக்கச் சொன்னாரே..அது எதுக்கு? எல்லாருமே புரியாமத்தான் விழிச்சுண்டு இருந்தா.

தயங்கித் தயங்கி அந்தப் புதுத்துணி,கனிகள்,புஷ்பம் எல்லாத்தையும் எடுத்துண்ட அந்தப் பையன்,பணம் இருந்த கவரை எடுத்துக்க ரொம்பவே தயங்கினான்

"தயங்காதே எடுத்துக்கோ..இது உங்க தாத்தாவுக்கு சேரவேண்டியது...அவர் இப்ப இல்லையோன்னோ,அதான் உன்கிட்ட குடுத்து உங்க அம்மாகிட்டே தரச்சொல்றேன்!" பெரியவா சொல்ல ஆச்சரியம் இன்னும் அதிகரிச்சுது.

ஸ்ரீகார்யம் உட்பட..எல்லோரும் திருதிருன்னு விழிக்கறதைப் பார்த்துட்டு மகாபெரியவாளே சொல்லத் தொடங்கினார்.

"என்ன யாருக்கும் எதுவும் புரியலையா? ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால ஸ்ரீமடத்துக்கு எதுத்தாப்புல ஒரு பலசரக்குகடை இருந்துதே ஞாபகம் இருக்கா? அந்தக் கடைக்காரரோட பேரன்தான் இவன்.

வட தேசத்துக்கு நான் யாத்திரை புறப்பண்டு இருக்கறச்சே, அந்தக் கடைக்காரர் என்னண்டை வந்தார். நமஸ்காரம் பண்ணினார். நான் அவர்கிட்டே எப்படி இருக்கேள்? வியாபாரம் எல்லாம் நன்னா நடக்கறதா?ன்னு கேட்டேன் ...

"வியாபாரம் முன்னே நடந்த அளவுக்கு இல்லை சுவாமி..ஏதோ ஓடிண்டு இருக்கு. மடத்தில் இருந்து கூட கொஞ்சம் பணம் வரவேண்டி நிலுவை இருக்கு. நீங்க வடதேசம் போறீங்க...திரும்பவர நாலஞ்சு மாசம் ஆகும்னாங்க..அதான் உங்ககிட்டே சொல்லலாம்னு தோணித்து" அப்படின்னார் அவர்.அப்போ மடம் ரொம்ப சிரம தசையில இருந்ததால் நானும் எதுவும் சொல்ல முடியலை. எவ்வளவு பாக்கின்னு மட்டும் கேட்டேன்.எண்ணூத்தி சொச்சம்னு சொன்னார்

வட தேசத்துல இருந்து திரும்பி வந்தப்போ, இங்கே கடையையே காணும். விசாரிச்சதுல கடைக்காரர் காலகதி அடைஞ்சுட்டதாகவும், அவரோட சொந்தக்காரா எல்லாரும் ஊரை மாத்திண்டு போயிட்டதாகவும் தெரிஞ்சுது..

கடைக்காரர் கடன் இருக்குன்னு சொன்னாரே, அதை எப்படி யார் மூலமா தர்றது? யார்கிட்டே தர்றதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். இவ்வளவு நாள் கழிச்சு இப்போதான் இவன் மூலமா அதை திருப்பி செலுத்தறதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு!. அவன் கடைக்காரரோட பொண்ணு வயத்துப் பேரன்"

மகாபெரியவா சொல்லிட்டு நிறுத்த அந்தப் பையனுக்கு ரொம்பவே ஆச்சரியம்! தான் எதுவுமே சொல்லாம, தன்னோட தாத்தாவை எப்படித் தெரிஞ்சுண்டார் பெரியவா? அந்த ஆச்சரியம் தீராமலே பெரியவாளை இன்னொரு தரம் நமஸ்காரம் செஞ்சுட்டு புறாப்பட்டான் அவன்.

மூணு நாலு வருஷம் முன்னால கடைக்காரர் சொன்னதை நினைவுல வைச்சுண்டு இருந்தது, அவரோட உறவுக்காரன் வந்ததும் அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டது, கடைக்காரர் சொன்ன தொகைக்கு சரியான சதவீதத்துல வட்டி குடுத்து! இத்தனை நாள்ல வட்டியும் அசலுமா என்ன தொகை வருமோ அதை ரொம்பத் துல்லியமா கணக்குப் போட்டு, அந்தத் தொகையை கவர்ல வைச்சுத் தரச் சொன்னது,

இதெல்லாம் மகாபெரியவா சாட்சாத் அந்த மகேஸ்வரனோட ..அம்சம்கறதை சொல்லாமலே உணர்த்தக்கூடிய அற்புதங்கள் இல்லாம வேற என்ன?

Wednesday 19 February 2020

காளிகாம்பாள் கோயிலுக்குப் போ.. (குழந்தையை தொலைத்த பெண்ணுக்கு திரும்பி கிடைத்த சம்பவம்)

 
காளிகாம்பாள் கோயிலுக்குப் போ..
(குழந்தையை தொலைத்த பெண்ணுக்கு திரும்பி கிடைத்த சம்பவம்)
(பெரியவா காளியா? காமாட்சியா?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


பத்து வயதுப் பெண் குழந்தையுடன், ஸ்ரீமடம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள் ஓர் அம்மாள். பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து எதிர்புறம் வந்தாள் "கூட்டம் இல்லாமல் இருக்கணுமே" ..பெரியவா தரிசனம் நிம்மதியாகக் கிடைக்கணுமே?' என்ற கவலை அரித்தது.


மடத்தின் வாசலுக்கு வந்ததும், ஏதோ பொறி தட்டியது. கையைப் பிடித்திருந்த பெண்ணைக் காணவில்லை. திக்கென்றது,தேடிப் பார்த்தாள், காணவில்லை. உள்ளே சென்று பெரியவாளிடம் முறையிட்டாள்.


பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு, தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தார்கள்.


"காளிகாம்பாள் கொயிலுக்குப் போ...ஒரு சீட்டில் 'பெண் குழந்தையைக் காணோம்,கண்டு பிடித்துச் சேர்ப்பிக்கவும்' என்று எழுதி, ஒரு ரூபாய் காணிக்கையுடன் கோயில் உண்டியில் போட்டு விட்டு வா" என்றார்கள்


அம்மாள் பதற்றத்துடன் காளிகாம்பாள் கோயிலுக்குப் போனாள். காளி..காளி என்று மனதிற்குள் ஜபம்.


ஆச்சரியம்! கோவில் வாசலிலேயே அந்தப். பெண் குழந்தை தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தது. சிலர் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


விவரம் கூறி, குழந்தையை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தாள் அம்மையார். நெஞ்சுருக நமஸ்கரித்தாள்.


"சீட்டு எழுதிப் போட்டயோ?"


"போட்டேன். அங்கே மூலஸ்தானத்தில், பெரியவாதான் கண்ணில் பட்டார்கள். இங்கே காளி தான் என் கண்களுக்குப் படுகிறாள்.


பெரியவா, காளியா? காமாட்சியா?


சகலம்!

About Kula Deivam Project.

About Kula Deivam Project.
With Mahaswamigal Anugraham, we have initated a website for collection of Kula Deivam Details so as to group devotees having common kula deivam. This is intented to initiate Kula Deivam Kaingaryam like lighting lamps to conducting veda parayanam in those temples jointly. Kindly register with your details to the below website.

https://mykuladeivamkoil.wordpress.com/contact/

Sincerely,
Maha Pidi Arisi Thittam Devotees,
Mobile : +91 739 737 1579

Email: vedarakshanam@gmail.com

About Maha Pidi Arisi Thittam.

About Maha Pidi Arisi Thittam.
 
With Mahaswamigal Anugraham, we started the Maha Pidi Arisi Thittam, a scheme to provide INR 1000/- Per month towards Akshathai to Vedic Patashaala/ Vedic Scholars.

Currently the amount is being sent to the following

1. Veda Patasaalas
2. Gurukulams
3. Niyama Athyayana Scholars
4. Nithya Agnihotris
5. Adhyapakars
6. Vedic Scholars above 60 Years of Age.

We act as a bridge and connect donors and needy Vedic Patasalaas and Niyama Athyayana Scholars. If anyone is interested to join this Kaingaryam, please call or send us email at the below contact details.

More details can be obtained from the website - www.mahapidiarisithittam.org or whatsapp - 7397371579, email - vedarakshanam@gmail.com

Tuesday 18 February 2020

"வெறும் கட்டைதான் - காஷ்டம்!"


"வெறும் கட்டைதான் - காஷ்டம்!"

( சமயப்பற்றுள்ள முஸ்லிம்களுக்காக தன் காஷ்ட
மௌனத்தை சிறிது நேரம் விட்ட மகா பெரியவா!)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும்,எளிய உடை
(வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

"பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம்
இந்த மஹந்திடம் (மஹானிடம்) ஆசிபெற்றுச்
சென்றிருக்கிறார்கள். என்று கேள்விப்பட்டோம்.
அத்தகைய மஹந்தை(மகானை) தரிசனம் செய்ய
வந்திருக்கிறோம்.

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்.
ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது.
ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து பக்தியோடு
வந்திருக்கிறார்கள். "இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்" என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது மகா - அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர்,
நியாயமான துணிச்சல்காரர்.

"வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள் சமயப் பற்றுள்ளவர்கள் மாதிரி இருக்கு.ரொம்பவும் சாந்தமா இருக்கா. பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா..."
இரண்டு நிமிஷம் கழித்து பெரியவாள் வெளியே வந்தார்கள்.
"ஆயியே....ஆயியே...." என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.
வந்தவர்கள், " நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம்.பெரியவா அனுக்ரஹம் வேணும்" என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
பெரியவாள் சொன்னார்கள்.
"நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.அதனாலேதான் உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிது நேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவன் காப்பாற்றுவார்.."
அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும்,மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்க திரும்பிச் சென்றார்கள். அப்புறம் பெரியவாளின் மௌன விரதம் தொடர்ந்தது.!
வெறும் கட்டைதான் - காஷ்டம்!

"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-


"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-

வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-"பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்" என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே

(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா சமர்த்தர்கள்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடுவயதினரான ஒரு சிவாச்சாரியார், 'வரும்படி நிறையக் கிடைக்குமே' என்று தன் கிராமத்தை விட்டு, நகரத்தை ஒட்டிப் புதிதாக முளைத்திருந்த ஒரு கோயிலில் பணி ஏற்றுக் கொண்டார். "போக வேண்டாம்" என்று தகப்பனார் சொன்னதையும் கேட்கவில்லை..

புதிய கோயிலில் நல்ல வருமானம் வந்தது. தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட சிவாச்சாரியார் தன் அகங்கார தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

விளைவு?

கோயில் சாவியை அவரிடமிருந்து வாங்கி, வேறொரு சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிட்டார், அடிதடி வழக்குகளுக்குப் பேர் போன தர்மகர்த்தா!

வேலை நீக்கப்பட்ட சிவாச்சாரியார், பெரியவாளிடம் வந்தபோது அவர் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.

"என்ன சிரமம் உனக்கு?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

"வேலை போயிடுத்து.....சாப்பாட்டுக்கே கஷ்டம்..."

"உன் அப்பா என்ன பண்றார்!"

"அவர் கிராமத்திலேயே இருக்கார். சிவன் கோயில் பூஜை..."

"உன் கிராமத்திலே என்ன விசேஷம்?..."சிவாச்சாரியார் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்.

"...அது நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். ரொம்பப் பழமையானது. ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டது. ஈசான்யத்தில் ஒரு பெரிய மரம் இருக்குமே...இன்னும் இருக்கோ..."

"இ....ரு...க்...கு.." என்று மெல்ல இழுத்தார் சிவாச்சாரியார். கவனம் வரவில்லை

"உங்க ஊர் பரமேசுவரனுக்கு உன்கிட்ட ரொம்பப் ப்ரீதி....அங்கே இங்கே போய் சின்னச் சின்ன கோயில்களிலே கஷ்டப்படவேண்டாமேன்னு நினைக்கிறார். நீ கிரமாத்துக்குப் போய் உன் அப்பாவுக்கு ஒத்தாசையா இரு..."

பெரியவாள் உத்தரவுப்படியே அவர் கிராமத்துக்குப் போய் சிவன் கோயில் பணியில் ஈடுபட்டார்.

ஆச்சரியம்!

அடுத்த மாதமே அந்தக் கோயில் திருப்பணிக்கு கமிட்டி போட்டுவிட்டார்கள் கிராமத்தார்.

"பாடல் பெற்ற ஸ்தலம்" என்று எக்ஸ்ட்ரா சிறப்பு-சிவனடியார்கள் கூட்டம்.

இரண்டு வருடம் கழித்து பெரியவாள் தரிசனத்துக்கு வந்து, நெடுஞ்சாண்கிடையா விழுந்தார் சிவாச்சாரியார்.

"எந்தக் கோயில் பூஜைன்னு கேளு" என்று எதுவுமே அறியாத அப்பாவியாக, சிஷ்யரிடம் கூறி விசாரிக்கச் சொன்னார்கள் பெரியவா...

அப்போதுதான் சிவாசாரியார் பழைய சரித்ரத்தைச் சொன்னார்.

"இப்போ எப்படி இருக்கே"

சிவாசாரியார் கண்களில் நீர் தளும்பித்து.

"பெரியவா கடாக்ஷம்.!...சௌக்கியமா...ரொம்ப சௌக்கியமா இருக்கேன்.

"சிவகடாக்ஷம்னு சொல்லு....நான் என்ன பண்ணினேன்.

தன்னை ஒளித்துக் கொள்வதில்,பெரியவாள் மகா சமர்த்தர்கள்.

Ups and downs, victories and defeats, sadness and happiness. That's the best kind of life.


Monday 17 February 2020

நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.!. (கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பழம் கொடுத்த வைபவம்)


நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.!.

(கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பழம் கொடுத்த வைபவம்)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்
.
பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார், ஓர் அன்பர். கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம். சொந்தமாக வாழைத் தோட்டம் உண்டு.
ஏராளமான கறிகாய்களுடன் நான்கு தார் வாழைப் பழங்களையும் கொண்டு வந்தார்.பெரிய பெரிய சீப்புகள். நீளமான பழங்கள்.
பெரியவா தாரிலிருந்த பழங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தட்டுகளில் வைக்கச் சொன்னார்கள்
. தொண்டர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், சொன்னதைச் செய்துதானே ஆக வேண்டும்.
ஐந்தாறு தட்டுகளில் தனித்தனிப் பழங்களாக வைக்கப்பட்டன. சுமாராக முந்நூறு பழங்கள் இருக்கும்.
பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும். ஏதோ ஒரு பள்ளிக்கூடக் குழந்தைகள்,நாலு பஸ்களில் வந்திறங்கி தரிசனத்துக்கு வந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வாழைப்பழம், பெரியவா தன் கையாலேயே கொடுத்தார்கள்.
கடைசிப் பையன் வந்தபோது, தட்டில் ஒரு வாழைப்பழம் மட்டும் இருந்தது.!
எத்தனை மாணவர்கள் வந்தார்களோ, அத்தனை வாழைப்பழங்கள் மட்டுமே இருந்தன!
மாணவர்கள் போனபிறகு பெரியவாள் சொன்னார்கள்;
"குழந்தைகள்,கிறிஸ்தவப் பள்ளியிலிருந்து வருகிறார்கள். மெஜாரிட்டி கிறிஸ்தவக் குழந்தைகள். இவர்களுக்குவிபூதி குங்குமம் கொடுப்பது சரியாக இருக்காது. அவர்களுக்கும் மனத்திருப்தி ஏற்படாது. பழம் என்றால்யாரும் மறுப்பதற்கில்லை.அதனால்தான் எல்லோருக்கும் பழத்தைக் கொடுத்தேன்."
எவர் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்பது பெரியவா கொள்கை.
"சங்கரமடம் என்பதால் நான் விபூதி கொடுத்திருந்தால் எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்வார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், சுவரோரமாக உதறிவிட்டுப் போயிருப்பார்கள்!"
நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.!.

"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"


"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"

(பூஜைக்கு வில்வம் தந்த புரந்தரன்); (புரந்தரனுக்கு மோட்சம் தந்த மஹா பெரியவா!)
கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா-2012 பதிவு
நன்றி-சக்தி விகடன்
.மஹா பெரியவா ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். பெரியவா ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழியில், திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. மஹானுடன் சென்றவர்கள், ''பெரியவா, மழை பெய்யுது. பல்லக்கிலே ஏறிண்டுங்கோ பெரியவா'' என்றனர். அதற்கு மஹா பெரியவா,' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்து வரும்போது நான் சிவிகையிலா? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லி விட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.
அருகில் இருந்த கிராம எல்லையில் ஒரு பழைய சிவன் கோயில் தெரிந்தது. ஸ்வாமிகள் அங்கே தங்கி மழையில் நனைந்த காவி வஸ்திரத்தை மாற்றிக்கொண்டார். ஸ்வாமிகள் அங்கே தங்கி இருக்கும் விஷயம் ஊரில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது. அனைவரும் ஸ்வாமிகளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று வணங்கினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு ஸ்வாமிகள் தம்முடைய யாத்திரையைத் தொடர்ந்தார்
.

சுமார் எட்டு மைல்கள் சென்றதும் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தின் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்து
கொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய பிரார்த்தித்துக் கொண்டார்கள். பெரியவாளுக்கு என்ன தோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. பக்தர்களுக்காக விறு விறுவென்று கொட்டகையும் போடப்பட்டது.

.மறுநாள் காலையில் பெரியவா ஸ்நானத்துக்குச் சென்றுவிட்டார். அவர் திரும்பியதும் பூஜைக்கு உட்கார்ந்துவிடுவார். ஆனால், பூஜைக்குத் தேவையான வில்வம் எங்குமே கிராமத்தில் எங்குமே கிடைக்கவில்லை. மடத்து காரியதரிசிக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. வில்வம் இருந்தால்தான் பூஜை நடக்கும். பூஜை முடிந்தால்தான் பெரியவா பிக்ஷை ஏற்பார். இதில் வேறு பெரியவா 21 நாள் இந்த கிராமத்தில் தங்கப்போவதாகச் சொல்லி இருக்கிறாரே என்ற கவலை வேறு அவருக்கு ஏற்பட்டது. பெரியவா பூஜைப் பொருட்களைப் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'பெரியவா, ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துவிட்டார்.
பதினொன்றரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. 'சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே' என்று காரியதரிசி பிரமை பிடித்தவர்போல் நின்றுகொண்டு இருந்தார்.
.தியானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா ஒரு சிறு புன்னகை.. மடத்தில் பூஜா கைங்கர்யம் செய்துவரும் ஒரு பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலென்று நிறைய மூணு தள வில்வம்! பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா?. வில்வம்தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கி விட்டார். ''யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்தக் கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'
'ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜை, பிரவசனம் எல்லாம் நடந்தது. ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். மறுநாள் காலை காரியதரிசி அந்தப் பையனிடம், ''அப்பனே, இன்னிக்கும் மண்டப மூலையில வில்வம் இருக்கா பாரேன்' என்றார். என்ன ஆச்சர்யம்? முந்தின தினம் போலவே அங்கே ஒரு கூடை நிறைய வில்வம் இருந்தது.
வில்வத்தைப் பார்த்த பெரியவா அர்த்தபுஷ்டியுடன் காரியதரிசியைப் பார்த்தார். 'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது. “யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிறான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு பிறப்பித்தார். மறுநாள் அதிகாலையிலயே காரியதரிசி மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்..ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைந்தான்.
எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?
'புரந்தர கேசவலு''ங்கய்யா.
'தமிழ் பேசறியே எப்படி?'
'அய்யா, எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே போயிட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே போயிட்டாரு. நான்தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.
''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது?'
'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேய்க்கும்போது ஒருதடவை அப்பாரு ''ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு இலை மரம் அது தான் வில்வ மரம். சிவன் சாமிக்கு அத போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.
மூணு நாள் முன்னே .. சாமி மடத்துக்காரங்க கூட இலையைக் காட்டி கேட்டாங்க. மாடு மேய்க்கறவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''
மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு எதுவும் வேணுமா? ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.
'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதைக் கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.
'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தரதாசர், தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புளகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.
பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.
21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?
'சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''
மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்..பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.
அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .
காரியதரிசியிடம் பெரியவா சொன்னது இதுதான்:
''அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நா அவா ஊருல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னைக்கு, 'எனக்கு நீங்க மோட்சம் வாங்கி கொடுக்கணும்னு கேட்டான்.' "சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபையால உனக்கு அது கிடைக்கும்"னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காய்ச்சல் ஏற்பட்ருக்கு “”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்"

"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"

 
"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"
(பக்குவமா சொன்ன பெரியவா)
(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன.வயல்வெளி ,தோட்டம்,துரவு,மாதா கோயில்,தர்கா,மயானம் போன்ற இடங்களில் மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன .வெயிலிலும்,மழையிலும் காய்ந்தும்,நனைந்தும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்களுக்கு வழிபாடுகளும் இல்லை.


பெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்கங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டாலும், மழை-வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி நித்தியப்படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள் இருவர், நாள் தோறும் ஸ்ரீ மடம் வண்டியில் சென்று, அபிஷேக ஆராதனை - நைவேத்யம் செய்து வந்தார்கள்.எல்லாப் பூஜைகளையும் முடித்துக்கொண்டு,ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியதும் பெரியவாளுக்குப் பிரசாதம் கொடுப்பார்கள்


இந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லைக்குள் இருக்கின்றன்.


"மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடிச் சுத்தம் செய்து கொள்ளாமல்,ஸ்ரீமடத்துக்குள் எப்படி நுழைவது? அது தவறு இல்லையோ?" என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது.


சந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்; " நாம் மயானத்துக்கு அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்வதற்காகப் போகவில்லை.சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்து விட்டு,உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்ல்லை, நமக்கு மடிக்குறைவும் கிடையாது.."


இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பு ஏற்படும் நிலை வந்துவிட்டது.


இந்தக் கட்சிக்கும்,அந்தக் கட்சிக்குமாக நாலைந்து பேர் சேர்ந்தார்கள். யார் வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் ஆதரவு கொடுக்கலாம் தீர்ப்பு வழங்க முடியாதே!


கடைசியில், ஸ்ரீமடத்தின் 'உச்ச நீதி மன்ற'த்துக்குப் போயிற்று வழக்கு!


இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா.முடிவாக முத்தாய்ப்பான தீர்ப்பைக் கூறினார்கள்.


"ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம்.அதனால் தீட்டு வந்துவிட்டது.... என்று எண்ணம்..அந்த எண்ணம் தோன்றியவுடனே தீட்டும் உண்டாகி விடுகிறது!...அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்."


"சந்திராவுக்கு ஸ்மாசனம் என்று எண்ணமே இல்லை..கோபுரம்,கர்ப்ப க்ருஹம் என்றில்லா விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்து விட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது என்று எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை; ஸ்நானமும் வேண்டாம்.


மண்டை உடைய சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று.


"எவ்வளவு தெளிவா,ஆணித்தரமா பெரியவா முடிவு சொல்லியிருக்கா...ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை பக்குவமாக சொல்லிட்டாளே!" என்று வியந்து மகிழ்ந்தார்கள்.


பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும், பக்குவமாகத்தானே இருக்க முடியும்!..

Friday 14 February 2020

"ஆசி ஒன்றே போதுமே" (பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)


"ஆசி ஒன்றே போதுமே"
(பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)
(திரு வி.ஜி.பன்னீர்தாஸ்க்கு நடந்த அதிர்ச்சியும் புகழாரமும்)
சொன்னவர்-எஸ்.பாண்டுரங்கன் காஞ்சிபுரம்
(நிர்வாக அறங்காவலர்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நான் 1972-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தேன். அந்த ஆண்டு திரு.வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்கள்,வேலூரில் அவர் நடத்தும் தவணை முறைக் கிளையைத் திறப்பதற்காகச் சென்று இருந்தார்.காஞ்சிபுரம் மஹா பெரியவாளை தரிசித்து, அவருடைய ஆசி பெறவேண்டும்,என்று என்னுடைய வேலூர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரத்தில் உள்ள என் இல்லத்துக்கு வந்தார்கள்.வந்தவுடன் ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அப்போது காஞ்சி சங்கர மடத்துக்கு ஸ்ரீகார்யமாக இருந்த திரு.ஜானகிராமையா அவர்களிடம் phone மூலம் தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். "பெரியவா அவர்கள் தேனம்பாக்கத்தில் உள்ளார். நீ அவர்களை அழைத்துக்கொண்டு போய் வா" என்று சொன்னார்.
அன்றைய தினம் ஸ்ரீ மஹா பெரியவா மௌனம்.பாரத நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மாண்புமிகு ஸ்ரீ வி.வி.கிரி.அவர்கள்,அன்றைய தினம் காலை சுமார் பத்து மணி அளவில் ஸ்ரீ மஹா பெரியவாளைத் தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றுவிட்டார்
நாங்கள் அன்று மாலை ஐந்து மணி அளவில் தேனம்பாக்கம் சென்று ஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.தேனம்பாக்கத்திற்கு திரு.வி.ஜி.பி,அவர் மனைவி,ஒரு புகைப்படக்காரர், திரு கிருஷ்ணமூர்த்தி,நான் ஆகிய ஐவர் சென்றோம்.
திரு பன்னீர்தாஸ் அவர்கள், போட்டோ படம் எடுப்பவரிடம்,"௳ஹா பெரியவா அவர்கள் என்னை ஆசிர்வாதம் செய்யும் சமயம் நன்றாகப் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்" என்று சொன்னார் நான் குறிக்கிட்டு,"எதற்கும் அவர்களிடம் உத்திரவு பெற்றால் நலமாக இருக்கும்" என்று சொன்னேன். அதற்கு திரு வி.ஜி.பி. அவர்கள்,"பெரியவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள்.நாம்தான் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்.
நாங்கள் வந்த விவரம் பெரியவாளிடம் சொல்லப்பட்டது.வரச்சொல் என்று அனுமதி கொடுத்துவிட்டு,மஹாபெரியவா எங்களுடன் பேச ஆரம்பித்துவிட்டார் அவர் குடிலுக்கு உள்ளே இருந்தார். நாங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டோம்.
ஸ்ரீ மஹாபெரியவா,திரு வி.ஜி.பி யைப் பார்த்து "எதற்கு வந்தீர்கள்!" என்று கேட்டார்கள்.
"நான் பத்தாயிரம் வீடுகள் கட்டி,தவணை முறையில் கொடுக்க ஒரு ஸ்கீம் போட்டுள்ளேன்,அதற்கு ஸ்ரீ மஹாபெரியவாளுடைய ஆசீர்வாதம் வேண்டும்.நான் ரோம் நாட்டிற்குச் சென்று, போப் ஆண்டவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றேன்.இன்னும் பல மகான்களை தரிசித்து ஆசி பெற்றேன். அது போன்று தங்களுடைய ஆசிர்வாதமும் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளேன்.."
ஸ்ரீ மஹா பெரியவா; இதற்கு எவ்வளவு பணம் தேவை?
வி.ஜி.பி.; 42 கோடி ஆகும் என்று உத்தேச மதிப்பு.
ஸ்ரீ மஹா பெரியவா; இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது.
வி.ஜி.பி. ' நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தேன். சில ஆண்டுகள் கழித்து தவணை முறைத் திட்டம் ஒன்று ஆரம்பித்தேன். அது வளர்ந்து,இப்பொழுது பல கிளைகள் உருவாகி உள்ளன.எல்லாம் மக்கள் பணம்தான். இதைப் போன்றுதான் வீடுகள் திட்டமும் செயல்படுத்தலாமென உத்தேசித்துள்ளேன். தவணை முறைத் திட்டம் ஆனபடியால் பணம் ரோலிங் ஆவதற்கு எங்களுக்கு சௌகரியமாக உள்ளது. இதற்கு அதிக முதலீடு தேவை இல்லை.நம்பிக்கை,நாணயம்,மரியாதை இதுதான் எங்கள் முதலீடு
ஸ்ரீ மஹா பெரியவா ; நல்ல திட்டம்தான். வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு உதவியாகவும்,நேர்மையாகவும்,பயன் உள்ளதாகவும் ஏழைகளுக்கு சேவை செய்யுங்கள்.
இதற்குள் எங்களுடன் வந்த கேமராமேன் 20 படங்களை எடுத்து இருப்பார்.ஸ்ரீ மகாபெரியவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தான ஆயிரம் கால் மண்டபம் அருகில் சென்றோம். ஆயிரங்கால் மண்டபம் பழுதடைந்த நிலையில் கல்தூண்கள் எதிரே விழுந்து இருந்தன.அந்த கல்தூண்களை திரு வி.ஜி.பி. பார்த்து, "என்ன சார்? விலை மதிப்பே இல்லாத அளவு கல்தூண்கள் இப்படி சிதறிக் கிடக்கிறது? அவ்வளவும் Black Gold சார்!" என்று சொன்னார். அந்த சமயம் அவர் சென்னை கடற்கரை ஓரம் Golden Beach கட்டிக் கொண்டு இருந்தார்.
பிறகு அவர்,"என் வாழ்நாளில் இன்று மிகவும் சந்தோஷமான நாள். மறக்கமுடியாத இனிய நாள்! மஹா பெரியவாள் அவர்கள் எவ்வளவு எளிமையாக உள்ளார்!" என்று மனமாரப் புகழ்ந்து என்னிடம் சொன்னார். "நான் போய் நாலு நாட்களில் இன்று எடுத்த போட்டோ பிரதிகளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்
அவர் சென்னை போன ஐந்தாம் நாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் , "கண்கண்ட தெய்வம் என்றால் காஞ்சி சங்கராசாரியார்தான் விலை உயர்ந்த கேமராவினால் அன்றைய தினம் எடுக்கப்பட்ட போட்டோ படம் ஒன்று கூட பதிவாகவில்லை! எல்லா பிரதிகளும் கறுப்பாக உள்ளது நீங்கள் அன்று உத்திரவு பெற வேண்டுமென்று சொன்ன வார்த்தையை நான் உதாசீனம் செய்தேன்,ஆனால், அவருடைய ஆசி ஒன்றே எனக்குப் போதும்" என்று கடிதத்தில் எழுதி இருந்தது..

Thursday 13 February 2020

பக்தனுக்கு அருள்வான் பல விதத்தில்

1968 ல் பெரியவாளை செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில் தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர்.
அப்போது பெரியவா அவருக்கு தன் படமும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம ஆனந்தம்!
மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ் பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிபோல் செய்தி வந்தது …. அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே எரிந்துவிட்டது! என்று.
அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்……. ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்… நீங்க கவலைப்படாதீங்க…. நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!
சந்தோஷமாக அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்குச் சென்றனர்.
போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த ஆச்சர்யம்…….. மடத்து பாரிஷதர் ஒருத்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து, “மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு வரச்சொல்லி சொன்னார்……..”
இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா? அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர்.
இரண்டு கரங்களாலும் புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!
அதே பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !……… கருவறை லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட மனப்ரமை என்று எண்ணினார்.
அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் இவர் தோளைத் தட்டினார்…….. ”ஸ்வாமி…. உள்ள பாரும் ஒய்!…. பெரியவா தெரியறாளா? என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

Wednesday 12 February 2020

வடநாட்டு மார்வாடி ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்தார்,



"வடநாட்டு மார்வாடி ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்தார், மகாபெரியவரைப் பற்றி அவருக்குப் பெரிதாக எந்த விவரமும் தெரியாது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களைத் தரிசிக்கவும், காமாட்சிக்குத் தன் வேண்டுதலாகக் குறிப்பிட்ட தங்கத்தை செலுத்தவும்தான் வந்திருந்தார், அந்த மார்வாடி.
வந்த இடத்தில் காமாட்சி கோயிலுக்குப் போகும் சமயத்தில் கொஞ்சம் நேரமாகிவிடவே நடை சாத்திவிட்டதால், அங்கே இருந்த ஒருவர் சொன்னதை வைத்து, ஸ்ரீமடத்துக்கு மகாபெரியவரை தரிசிக்க வந்திருந்தார்.
கோயில் நடை திறக்கும்வரை எங்கேயோ சென்று நேரத்தை வீணாகக் கழிப்பதைவிட, மகானை தரிசித்தால் புண்ணியம், நேரமும் வீணாகாது என்ற எண்ணம் அவருக்கு. ஸ்ரீமடத்துக்கு அவர் வந்த சமயத்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. மெதுவாக நகர்ந்த வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த மார்வாடி, தன் முறை வந்ததும் மகாபெரியவா முன் விழுந்து நமஸ்கரித்தார்.
"சுவாமி, நான் இதற்கு முன்னால உங்களைப்பத்தி கேள்விப்பட்டதுகூட இல்லை. கோயில் தரிசனத்துக்குத்தான் வந்தேன். ஆனா,இங்கே வந்து உங்களை தரிசனம் செஞ்சதும், என் மனசுக்குள்ளே ஒரு பரவசம் நிறைஞ்சிருக்கு. உங்களுக்கு ஏதாவது கைங்கரியம் செய்யணும்னு எனக்கு தோணுது!" சிலிர்ப்பாகச் சொன்னார்.
கரம் உயர்த்தி அவரை ஆசிர்வதித்த மகான், "கொஞ்ச நேரம் மடத்திலேயே இரு...நீ செய்ய வேண்டியத்தைச் சொல்கிறேன்!" என்றார்.
ஸ்ரீமடத்தில் ஓரிடத்தில் சென்று அமர்ந்தது, அந்த மார்வாடி குடும்பம். ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்தது. பொறுமையாக இருந்த அவர்கள், நேரம் வேகமாக நகர நகர, காமாட்சி கோயிலில் நடை திறந்துவிடுவார்கள், சரியான நேரத்துக்குப் போனால் அம்மனை தரிசித்துவிட்டு, மேலும் சில கோயில்களையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம்...மகான் இன்னும் எதுவும் சொல்லவில்லையே என்று மனதிற்குள் எண்ணம் அலைமோத தவிப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
அந்த சமயத்தில் தன் மகளோடு வந்து மகானைப் பணிந்து கொண்டிருந்தார் ஓர் ஏழை.
"பெரியவா..இவள் என்னோட சீமந்த புத்திரி (மூத்த மகள்). அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப்படற சூழல். இந்த நிலைமைல, இவளுக்கு வயசு ஆகிண்டே போறதால, கல்யாணம் பண்ணவேண்டிய சுமையும் சேர்ந்துடுச்சு. சொந்தத்துலேயே ஒரு வரன் இருக்கு. ஆனா, காலணா காசுகூட கையிலே இல்லாததால போய்க் கேட்கறதுக்குக் கூட தயக்கமா இருக்கு. நீங்கதான் இவளுக்குத் திருமணம் கைகூட அனுகிரஹம் செய்யணும்...!" தழுதழுப்பாகச் சொன்னார், அந்த ஏழை.
கரம் உயர்த்தி ஆசிர்வதித்த மகான், "கொஞ்சம் இரு...!" என்று அவரிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த மார்வாடியை விரல் சொடுக்கி கூப்பிட்டார்.
பவ்யமாக வந்த அவரிடம் "காமாட்சி கோயில்ல தரிசனம் பண்ணிட்டு, உண்டியல்ல செலுத்தணும்னு பதின்மூன்று பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாயே, அதை இவரிடம் கொடு...நீ நேரடியாக அந்தக் காமாட்சியிடமே சேர்ப்பித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்!" சொன்னார், மகான்.
அதைக் கேட்டதும் அப்படியே அதிர்ந்துபோனார், அந்த வடநாட்டுக்காரர். "கோயில் உண்டியலில் போடுவதற்காக தான் நகையைக் கொண்டுவந்த விஷயத்தை, அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லவில்லை....ஒரு பவுன் அரைப்பவுன் என்று சின்னச் சின்ன நகைகளாகச் சேர்த்து, மொத்தமாக பதின்மூன்று பவுனை ஒரு முடிச்சாகக் கட்டி பெட்டியில் பத்திரமாக வைத்து எடுத்து வந்திருந்தார். அது எப்படி இந்த மகானுக்குத் தெரிந்தது? காமாட்சி கோயிலில் அதைச் செலுத்த தீர்மானித்தது, இங்கே உட்கார்ந்திருந்த நேரத்தில்தான். அதையும் அல்லவா இவர் சொல்கிறார்?" மனதுக்குள் கேள்விகள் எழ ஆச்சரியத்தோடு அமைதியாக நின்றவரிடம் மகானே மறுபடியும் பேசினார்.
"என்ன, காமாட்சிக்குக் கொண்டுவந்ததை இந்தப் பொண்ணுக்கு எப்படித் தர்றதுன்னு யோசிக்கிறியா?" கேட்டவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார், "உன்னோட பேர் என்னன்னு எல்லோருக்கும் கேட்கறாப்புல சொல்லு!" சொன்னார்.
"காமாட்சி!" அவள் சொன்னது அங்கே எதிரொலித்தது.
மார்வாடி மட்டுமல்ல, அங்கே இருந்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள் இப்போது. காரணம், அங்கே வந்தது முதல் அந்தப் பெண்ணோ அவளது தந்தையோ அவள் பெயரைச் சொல்லவேயில்லை. அப்படியிருக்க, அவள் பெயரை எப்படி தெரிந்து கொண்டார் மகான்?
அப்புறம் என்ன, கோயில் உண்டியலில் செலுத்த கொண்டுவந்த நகைகளை, அப்படியே முடிச்சாக எடுத்து, மகான் முன்னிலையிலேயே மிகுந்த சந்தோஷத்தோடு அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்தார், மார்வாடி.
வடநாட்டு மார்வாடிக்குப் புண்ணியமும், ஏழைப் பெண் திருமணத்துக்குப் பொருளும் கிடைக்க அனுகிரஹம் செய்த மகானின் தீர்க்கதரிசனத்தை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

"எங்கும் வியாபிக்கும் பேரருள்"

"எங்கும் வியாபிக்கும் பேரருள்"

(போர்க் களத்தில் காவி உடையுடன் சந்யாசி உருவத்தில் பெரியவா)

(மெய் சிலிர்க்கும் சம்பவம்)

தகவல் உதவி--டாக்டர் கல்யாணராமன்
தொகுப்பு-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1956-ஆம் வருடம். இந்திய ராணுவத்தில் மெடிகல் ஆபிசராக பணியாற்றிய ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம் இது
ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்த போது அங்கே பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மகத்தான பணியை இவர் புரிந்தார்.
அச்சமயத்தில் இவர் ஒரு தடவை,போர்க்களத்தில் இருந்த சமயம் ஒரு குண்டு இவரையும் தாக்கியதில் மயக்க முற்று விழுந்து விட்டார். நினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்தவர், தான் ஒரு முதல் உதவி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தார்.உடனே தன் கீழ் வேலை செய்த ஒரு சிப்பாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார் டாக்டர்.
அவனோ படிப்பறிவு இல்லாதவன். டாக்டருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன்.ஆனால், டாக்டர் மயக்கமடைந்து விழுந்ததும் நிலை குலைந்து நின்று விட்டான்.என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தவன் முன், ஒரு சந்யாசி காவி உடையுடன் தோன்றினாராம்
"ஏன் இப்படி ஒண்ணுமே செய்யாமே நிக்கறே...உடனே டாக்டரை உன் தோளில் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடு" என்று சொல்லி மறைந்து விட்டாராம்..
அவர் சொன்னபடி சிப்பாயும் நடந்து கொண்டதால், டாக்டர் பிழைத்துக் கொண்டார் ஏதோ படிப்பு வாசனை இல்லாதவன் கூறுகிறான் என்று நினைத்து, டாக்டரும் அந்த சந்யாசி கதைக்கு முக்கியத்துவம் தரவில்லை. மறுத்தும் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்
சில மாதங்களில் அவர் பூர்ண குணமடைந்தார். அத்துடன் போரும் முடிந்து இருந்தது. அதனால் எப்போதும் வணங்கும் தெய்வமான மகா பெரியவாளை தரிசிக்க நேரில் வந்தார்.
ஸ்ரீபெரியவாளிடம் அந்த சிப்பாய் சொன்ன அபூர்வ நிகழ்ச்சியை இப்போது மகானிடம் சொல்ல மெதுவாக ஆரம்பித்தார். அதற்குள் சர்வ வியாபியான அந்த ஈஸ்வரரே முந்திக் கொண்டார்
"எனக்குத் தெரியுமே...நானே அங்கு வந்திருந்தேன். நீ தான் என்னைப் பார்க்கலே" என்றதும் டாக்டர் திகைப்பினால் உறைந்து விட்டார். அப்படி யெனில் அந்த சிப்பாய் சொன்னது அத்தனையும் உண்மை என்பது, இப்போது தான் டாக்டருக்குப் புரிந்தது..
எங்கும் பரப்பிரம்மயாய்,ஸ்ரீபெரியவா வியாபித்தருளி தன்னைக் காப்பாற்றினதையும், அதை அந்த ஈஸ்வரரே காட்சி சொல்லி மெய்ப்பித்து அருளியதையும்,டாக்டர் அறிந்து உருகிப்போனார்
இந்த மிலிடரி டாக்டர் தனக்கு நடந்த மெய் சிலிர்க்கும் அனுபவத்தை கண்களில் நீர் வழிய விவரித்ததாக ,டாக்டர் கல்யாணராமன் சொன்ன தகவல் இது.
இப்படிப்பட்ட பெருங்கருணை தெய்வத்தின் மேல் நாம் கொள்ளும் பூரண சரணாகதி,பக்தி நம்மை சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து,எல்லா நலன்களயும் ஈந்து சகல சௌபாக்கியங்களுடனும்,சர்வ மங்களத்துடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்..


Tuesday 11 February 2020

குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? - ரசமான விவாதம்’

ரசமான விவாதம்’
பெரியவாளின் சமையல் விளக்கம்.
"குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”
அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும்
ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.
மஹான் பெரிதாகச் சிரித்தார்.
“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.
இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?
“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப்
போகிறோம்.
அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.
இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம்.
நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு,
ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?
இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை.
மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.
அவன் பலவிதமான
குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.
இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது.
அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது.
இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் –
மோர் – பட்சணம் –
இதைப் போல் மனிதனின்
வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.
மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன்
நம் மனம் லயிக்க இது
உதவுகிறது.
பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப்
பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன.
மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.
அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
தெளிவாக்குகிறது.
அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு
எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.
குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை